Tamilnadu

”மக்களின் வீடுகளுக்கே சென்று திட்டங்களை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு” : அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில், ’கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் ஆர்.காந்தி 231 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார். மேலும் மகளிர் திட்டத்தின் கீழ் சுய உதவி குழுக்களுக்கு 15 லட்சம் ரூபாயும், சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதியும் உட்பட பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, ”தமிழ்நாட்டை குடிசை இல்லா தமிழ்நாடாக மாற்றுவதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது கனவாக இருந்து வருகிறது. அதனால்தான் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கானை ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 231 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. முன்பு எல்லாம் அரசை தேடி மக்கள் செல்வார்கள். ஆனால் இன்று மக்களை தேடி அவர்களது இல்லங்களுக்கே அரசு செல்கிறது. அந்தளவிற்கு திட்டங்கள் அனைத்தும் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது திராவிட மாடல் அரசு” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”முருகன் மாநாட்டை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க காரணம் இதுதான்” : அமைச்சர் சேகர்பாபு சொல்வது என்ன?