Tamilnadu

“கடன் வழங்குவதை வங்கிகள் தட்டிக் கழித்தால் உடனடி நடவடிக்கை” - அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை !

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை கொடிசியா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடன் வழங்குவதை வங்கிகள் தட்டிக் கழிப்பதாக புகார் வந்தால் , முதல்வர் தனி பிரிவிலிருந்து இயங்கும் துறை உடனடி நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசியதாவது, “கடந்த ஜனவரி மாதம் முதல்வர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் எம்எஸ்எம்இ துறையில், 5068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் இதுவரை 1,645 நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. மீதம் இருக்கக்கூடிய தொழில் தொடங்காத வங்கி கடன் பெற்ற தொழில் முனைவோர்களை இங்கு அழைத்து இருக்கிறோம்.

அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வு ஏற்படுவதற்காக அனைத்து துறை அதிகாரிகளும் இங்கே அழைக்கப்பட்டுள்ளார். 8 மாத காலமாக தொழில் தொடங்காததற்கான காரணம், அதற்கான நடைமுறை சிக்கல்களை களைந்து, அவர்கள் விரைவில் தொழில் தொடங்க ஆவண செய்யப்படும். கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், இதுவரை ரூ.2,615 கோடியே 30 லட்சம் தொழில் தொடங்குவதற்காக வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

30 ஆயிரத்து 324 தொழில் முனைவோர்களை கடந்த மூன்று ஆண்டு காலத்தில் அரசு உருவாக்கி, 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை தமிழக முழுவதும் 16 தொழிற்பேட்டைகள், 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக 115.6 கோடி மதிப்பில் பத்து தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் சமச்சீரான தொழிற் வளர்ச்சி ஏற்படுத்தி, அதிக தொழில் வளர்ச்சியை உருவாக்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவு. கடந்த அதிமுக ஆட்சியாளர்கள், ஒன்றிய அரசின் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான், மின் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டதற்கு காரணம்." என்றார்.

தொடர்ந்து ஒரு சிலருக்கு தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் வங்கிகள் கடன் கொடுக்க உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தாலும் கடன் கொடுக்க மறுப்பது குறித்த கேள்விக்கு, "மாவட்ட வாரியாக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் குறைகளை கேட்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்குவதை வங்கிகள் தட்டிக் கழிப்பதாக புகார் தெரிவித்தால், முதல்வர் தனி பிரிவிலிருந்து இயங்கும் துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்.” என்றார்.

Also Read: உணவில் கலப்படம் : “சட்டபூர்வமான நடவடிக்கைக்கு அரசு எப்போதும் தயங்காது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் !