Tamilnadu
25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு : “பகல் கொள்ளையை நிறுத்துக” - CPI முத்தரசன் கண்டனம் !
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்பது வழக்கம். ஆனால் தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச் சாவடிகளில் திடீரென 5% கட்டணத்தை உயர்த்தியது ஒன்றிய அரசு. இதற்கு கண்டனங்கள் குவிந்த நிலையிலும், அதனை திரும்பப்பெறவில்லை.
இந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் 25 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7% வரை கட்டணம் வரும் செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்படவுள்ளது. இந்த சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு தற்போது மேலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :
"தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 28 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஒரு முறையும், செப்டம்பர் மாதம் ஒரு முறையும் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை இரண்டாக பிரித்து கட்டணங்களை உயர்த்தி வருகின்றது. இது சாலை வழியாக பயணம் செய்வோர் மீது நடத்தப்படும் சட்டபூர்வ பகல் கொள்ளையாகும்.
தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் கட்டுதல், இயக்குதல், திரும்ப ஒப்படைத்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் இன்னும் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படவில்லை. பல ஊர்களுக்கான சேவை சாலைகள் போடப்படவில்லை. இந்த நிலையில் முன்னர் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக பழுதடைந்துள்ளன.
பழுது பார்த்தல் என்ற பெயரில் வழிமாற்றம் செய்யப்பட்டு, சாலை வழிப் பயணிகள் பல மாதங்களாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் எரிபொருள் செலவும், வாகன தேய்மான செலவும் அதிகரிக்கின்றன. பாஸ்ட்டேக் - முறையில் முன் பணம் கட்டாதவர்களிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பது பொருளாதார பயங்கரவாதத் தாக்குதலாகும். இது, சில்லறை வியாபாரத்துக்கும், மொத்தக் கொள்முதல் வணிகத்திலும் நடைபெறும் பொருள் போக்குவரத்து வாகனங்கள் பெரும் தொகை கட்டணமாக செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், இது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.
இவைகளை எதனையும் கருத்தில் கொள்ளாது, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்திய பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், சுங்க கட்டண முறைக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை கட்டமைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது."
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!