Tamilnadu

“சமக்ரா சிக்ஷா” திட்டம் - தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்குக : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில், “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை என்ற செய்திகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நாட்டின் கல்வித் துறையில், ஒன்றிய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின்கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு 3,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், இதில் ஒன்றிய அரசின் பங்கு 2,152 கோடி ரூபாய் (60 விழுக்காடு) என்றும் தெரிவித்து, ஒன்றிய அரசின் அந்த பங்களிப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான 573 கோடி ரூபாயினை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர, முந்தைய ஆண்டுக்கான 249 கோடி ரூபாயையும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இதற்கு முன்பும், தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு தான் கடிதம் எழுதிய பின்னரே நிலுவையில் உள்ள நிதியில் ஒரு பகுதி கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, உரிய நேரத்தில் மானியங்களை விடுவிக்கக் கோரி ஜூலை மாதம் கோரிக்கை வைத்த நிலையிலும், இதுவரை “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், பி.எம்.ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது தெரிய வந்துள்ளது என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், தேசிய கல்விக் கொள்கை 2020-ல் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை என்றும், பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு போன்ற முன்னோடி மாநிலங்கள், பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் பல சிறப்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், பிராந்திய அடிப்படையில் சமூக-பொருளாதார நிலைமைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும் போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியினை நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தகைய நடவடிக்கை “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின் நோக்கமான “எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது” என்பதற்கு எதிரானது என்றும் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவித்திட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதில் நேரடியாக தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!