Tamilnadu

ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாடு வீரர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் பரிசு! : தமிழ்நாடு தடகள சங்கம் வழங்கல்!

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், பிரவீன் சித்திரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ் தமிழரசன் ஆகிய 6 தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை. எனவே, வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், எதிர்காலத்தில் அதிக ஒலிம்பிக் வீரர்களை உருவாக்கும் முனைப்பிலும் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 6 தடகள வீரர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் ஒரு பயிற்சியாளருக்கு 25,000 ரூபாய்க்கான காசோலை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

நிகழ்வில், பங்கேற்ற வீரர்கள் தமிழ்நாடு அரசு தங்களுக்கு சிறப்பான முறையில் உதவியதாகவும், பாரிசில் தங்களுக்கு தேவையான அனைத்தையும் தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்படுத்தி கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

பாரிசில் இருந்து வந்த பின் தங்களை அழைத்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வீரர்களாகிய நீங்கள் பயிற்சியில் கவனம் செலுத்துங்கள், தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம்” என கூறியது தங்களை மேலும் உத்வேகப்படுத்தியதாக தெரிவித்தனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு எனவும் வீரர்கள் தெரிவித்தனர்.

இந்த பாராட்டுவிழா நிகழ்வில், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, காவல்துறை அதிகாரி சுதாகர், நந்தகுமார் ஐ ஆர் எஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read: ”கலைஞரிடம் இருந்து இதை கற்றுக்கொள்ளுங்கள்” : இளைஞர்களுக்கு வேண்டுகோள் வைத்த கனிமொழி எம்.பி!