Tamilnadu
"முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆளுமைத்திறனுக்கு கிடைத்த வெற்றி"- அடியாழத்திலிருந்து பேசியுள்ளார் ரஜினிகாந்த் !
முரசொலி தலையங்கம் (26.08.2024)
சூப்பர் ஸ்டாரின் பாராட்டு
.......................................
மாண்புமிகு அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆற்றிய உரை என்பது இதயத்தின் அடியாழத்திலிருந்து ஆற்றிய உரையாக அமைந்திருந்தது.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருவரையும் மிகப்பெரிய ஆளுமைகளாக வியந்து பேசினார் ரஜினிகாந்த் அவர்கள். பொதுவாக மேடைகளுக்கு வருவதில்லை, அதிலும் குறிப்பாக அரசியல் மேடைகளுக்கு வருவது இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு, அவர் பேசிய அரசியல் என்பது மிகமிகத் தெளிவானது.
'சுற்றி இருக்கும் ஐம்பது பேருக்காக வாழ்ந்து செத்துப் போவது தான் மனிதனின் இயல்பு. ஆனால் இனத்துக்காக, மொழிக்காக, சமூகத்துக்காக தனது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒப்படைத்து வாழ்வது தான் பெரிய பேறு. அத்தகைய வாழ்க்கை வாழ்ந்தவர் கலைஞர்" என்ற வரியில் தலைவர் கலைஞரின் ஒட்டுமொத்த போராட்டக் குணத்தை யும், அருந்தொண்டையும் அடக்கிச் சொன்னார் ரஜினிகாந்த் அவர்கள். ''கலைஞர் அனுபவித்த துன்பத்தை வேறு ஒருவர் அனுபவித்திருந்தால் அவர்கள் எப்போதோ காணாமல் போயிருப்பார்கள். ஆனால் கலைஞரால் மட்டும் தான் இன்று வரை பிரகாசிக்க முடிகிறது. அவர் மறைவுக்குப் பிறகு தான் அதிகமாக நினைக்கப்படுகிறார். இனி தான் அவர் அதிகமாக நினைக்கப்படுவார்" என்றார் ரஜினி காந்த் அவர்கள்!
'' ஒரு மனிதனின் வரலாறு என்பது அவனது மரணத்துக்குப் பிறகு கணக்கிடப்பட வேண்டும்" என்று சொன்னவர் தலைவர் கலைஞர். ரஜினிகாந்த் எடுத்துரைத்த கருத்து என்பது இந்த சொல்லின் விரிவாக்கமாக அமைந்திருந்தது.
''முதலமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கலைஞர் ஒரே மாதிரிதான் இருப்பார். வீட்டு வாசலில் அதிகமாக போலீஸ் இருந்தால் அவர் முதலமைச்சராக இருக்கிறார் என்று அர்த்தம். இல்லாவிட்டால் இல்லை என்று அர்த்தம். அவரைச் சந்திக்கும் போது அதில் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியாது" என்றார் ரஜினிகாந்த் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருகாலத்தில் அளித்த பாராட்டைத்தான் நினைவூட்டியது ரஜினிகாந்த் அவர்களின் பாராட்டு.
''தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவர் தான் என் தம்பி கலைஞர் கருணாநிதி" என்றார் பேரறிஞர் அண்ணா. அரசியல் எல்லைக்கு வெளியில் இருந்து ரஜினிகாந்த் அவர்கள் இதே கருத்தைச் சொன்னார்கள். பதவியாக அல்ல பொறுப்பாக உணர்ந்து கலைஞர் அவர்கள் செயல்பட்டார், செயல்பட வைத்தார் என்பதை உணர்த்துவதாக இருந்தது அது.
தமிழினத் தலைவர் கலைஞரது வழித்தடத்தில் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எத்தகைய சீரோடும் சிறப்போடும் கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறார் என்பதையும் ரஜினிகாந்த் அவர்கள் மனமுவந்து பாராட்டினார்கள். ''சில தலைவர்கள் மறைந்ததற்குப் பிறகு அந்தக் கட்சிகள் எப்படி கலகலத்துப் போயிவிடுகின்றன'' என்பதைக் கிண்டலாகக் குறிப்பிட்ட ரஜினி அவர்கள், '' கலைஞர் அவர்கள் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வென்று காட்டிவிட்டார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுதான் அவரது உழைப்புக்கும் ஆளுமைத்திறனுக்கும் கிடைத்த வெற்றி என்றார் ரஜினிகாந்த் அவர்கள்.
மாக்சிம் கார்க்கி எழுதிய 'தாய்' காவியத்தில் புரட்சியாளர்கள் இலியிச் லெனினும் ஜோசப் ஸ்டாலினும் வருவார்கள். 'தாய்' காவியத்தை கலைஞர் அவர்கள் இப்படித் தொடங்குவார்கள்...
'' இருட்டுக்குள் ரஷ்ய பூமி
இடர் பட்டுக் கிடந்த போது
ஏறனைய லெனின் ஸ்டாலின்
இருதலைவர்களுடன் இணைந்து
எழுச்சி முரசு கொட்டி
எத்தனை முறையோ சிறைப்பட்டு
எழுத்து வடிவிலும் எப்போதும் மணம் வீசும் பூ!
மாக்சிம் கார்க்கியாம் மனிதநேய மாண்பு!
மன்பதைக்குத் தந்திட்ட சிகப்பு பூ! செம் பூ!
அன்னை என்றும் தாய் என்றும்
அழைக்கப்படும் அற்புதப் பூ!
பல மொழிகளில் மணம் பரப்பும் அப்பூவை
கலை வண்ணமுடன்
கவிதை நடையில் வழங்குகின்றேன்" - என்றுதான் அந்த நூல் தொடங்கும். இதோ தமிழ்நாட்டின் 'தாய்'க்காவியத்தில் தலைவர் கலைஞரும், இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினும் இணைந்து எழுச்சி முரசு கொட்டி எத்தனையோ முறை சிறைப்பட்டு இந்த மானுடம் பயனுற நல்ல பல திட்டங்களைத் தீட்டி முன்மாதிரி மாநிலமாக வளர்த்து வருகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
ரஷ்ய புரட்சி ஏற்படுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது 'தாய்' காவியம். புரட்சிக்கு அடித்தளம் இட்டது 'தாய்' காவியம். அம்மா நீலவ்னாவை புரட்சியாளராக ஆக்கினான் மகன் பாவெல். அன்னை அஞ்சுகம் அம்மையார் குறித்து பேரறிஞர் அண்ணா எழுதிய கட்டுரையும் ரஷ்யத் தாயைத் தான் நினைவூட்டும். ''நான் அஞ்சுகம் அம்மாவை சந்திக்கும் போதெல்லாம் கழகத்தைப் பற்றித்தான் பேசுவார்'' என்று எழுதி இருப்பார் அண்ணா. பேரறிஞர் பெருந்தகையை 'அண்ணா தம்பி' என்று அழைத்த ஒரே அன்னை அஞ்சுகம் அவர்கள்தான்.
''இன்றைக்கு நாங்கள் வீணாக அலைவது போல உனக்குத் தெரியலாம் அம்மா! ஒரு காலம் வரும். அப்போது நாங்கள் பேசிய கொள்கை அனைத்தையும் செயல்படுத்திக் காட்டுவோம் அம்மா" என்று அஞ்சுகம் அம்மையாரிடம் தான் சொன்னதாக கலைஞர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். இதுதானே அரைநூற்றாண்டு வரலாறு!
ரஷ்யத் 'தாய்' உருவாக்கியது ஒரு பாவெல் அல்ல. அதையும் தான் மிகச் சரியாகச் சொன்னார் ரஜினிகாந்த் அவர்கள். ''இப்போதுதான் அரசியலில் நுழைந்து கடினமாக உழைத்து, பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு, மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் அருமையான, பெயர், புகழ் பெற்று அரசியலில் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்" என்று ஒவ்வொரு சொல்லையும் அளந்தெடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது. 'அடுத்த ஐம்பது ஆண்டுகள் இயக்கத்தை வழிநடத்தப் போகிறவர் மாண்புமிகு உதயநிதி அவர்கள்'' என்று அமைச்சர் எ.வ.வேலு சொன்னபோதும் அரங்கம் அதிர்ந்தது.
கொள்கைகள், அதனை வழிநடத்தும் தலைவர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. தலைவர்கள், தாங்கள் பேசிய கொள்கை நாட்டை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். ‘தாய் காவியம்’ என்பது தத்துவத்தின் காவியம் தானே!'திராவிட' காவியம் அல்லவா தமிழ்நாடு! திராவிட முன்னேற்றக் கழகம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!