Tamilnadu

“இனி வருங்காலங்களிலும் அண்ணாமலை தோல்வியடைவார்...” - CPI செயலாளர் முத்தரசன் விமர்சனம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக 27) வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெளிநாட்டு பயணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் முதல்வருக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். இந்த சந்திப்பில் வாழ்த்து மட்டுமே தெரிவித்தோம், எந்தவொரு கோரிக்கையும் வைக்கவில்லை.

பழனியில் கடந்த 2 நாட்கள் (ஆக 24, 25) நடைபெற்ற 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' வாக்குக்காக நடத்தப்பட்டதாக பார்க்கமுடியாது. முருகருக்காகவும் தமிழை வளர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட மாநாடு. ஆனால் முருகர் மாநாட்டை விமர்சித்து அரசியல் ஆதாயம் தேடும் அண்ணாமலை இனி வருங்காலங்களிலும் தோல்வி அடைவார். ஏனென்றால் அவர் பேசுவதே வாக்குக்காகதான்.

எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் கூட்டணியில் இருந்தவர்கள். இப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சித்து கொள்வார்கள், நாளை சேர்ந்து கொள்வார்கள். எனவே அவர்கள் பற்றி கருத்து தெரிவிக்க தேவையில்லை" என்றார்.

Also Read: ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளில் 60-ல் மட்டுமே போட்டி ? தோல்வி பயம் காரணமாக பாஜக முடிவு !