Tamilnadu

தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தும் திராவிட மாடல்! : தமிழ்நாடு அரசு புகழாரம்!

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் – அவன்

காணத் தகுந்தது வறுமையாம்

பூணத் தகுந்தது பொறுமையாம்”

- என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்கள் வாழ்வின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி அவர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதயாம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள் !

திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர் நலத்துறைக்குத் தனி அமைச்சகம் 1969-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது.

1969-ஆம் ஆண்டில், தொழிலாளர் நாளான, மே முதல் நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் 1969-இல் கணபதியாபிள்ளை பரிந்துரையை ஏற்று, அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்பட்டது.

தொழிற்சங்கப் பலம் இல்லாத் தொழிலாளர்களின் நலன் காத்தமை பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

விவசாயத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு இலவச மனைப் பட்டா விவசாய நிலங்களில் குடிசைகள் போட்டு வாழ்ந்த தொழிலாளர்கள், நிலச்சொந்தக்காரர்களால் எந்த நேரத்திலும் வெளியேற்றப்படும் அவலமான சூழ்நிலையில் வாழ்ந்தனர். அவர்கள் நலன் காத்திட 1971-இல் “குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம்” கொண்டுவந்து 1 இலட்சத்து 73 ஆயிரத்து 748 விவசாயத்தொழிளர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கி இலவச மனைப்பட்டா வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

நாங்கள் இரத்தம் சிந்தியும் நிறைவேற்ற முடியாத இந்தச் சாதனையை முத்தமிழறிஞர் கலைஞர் ஒரே ஒரு சொட்டு மையினால் நிகழ்த்தியுள்ளார் என்று முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மணலி கந்தசாமி பாராட்டினார். 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம், 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து; கிடைத்த உபரி நிலங்களை இலட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வழிவகை செய்தது;

தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல்,“பணிக்கொடை” வழங்கும் திட்டம் கண்டது ; விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில் விபத்து நிவாரண நிதி திட்டம் உருவாக்கியது; 1990-ல் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது; மே நாள் நூற்றாண்டு விழாவும் மே நாள் பூங்காவும், மே நாள் நூற்றாண்டு விழாவினையொட்டி 1990-இல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மே நாள் பூங்கா” எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது ; முதலான பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறது. ரூ.1,551 கோடியில் 20 நல வாரியங்கள் மூலம் நலத் திட்ட உதவிகள் 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 இலட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 18 இலட்சத்து 46 ஆயிரத்து 945 தொழிலாளர்களுக்கு 1,551 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.14.99 கோடியில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் நலத் திட்ட உதவிகள் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 26 ஆயிரத்து 649 தொழிலாளர்களுக்கு 14 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் 45 தொழில்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு; பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த திராவிட மாடல் ஆட்சியினால் பயனடைந்து வருகின்றனர். புதிதாக உப்பளத் தொழிலாளர் நல வாரியம் உப்பு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மற்றும் இணையவழி தற்சார்புத் (Gig Workers) தொழிலில் ஈடுபடும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியமும், தமிழ்நாடு இணையவழி தற்சார்புத் (Gig Workers) தொழிலாளர்கள் நலவாரியமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் ஓய்வூதியம் அதிகரிப்பு, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000/- என்பது ரூ.1,200/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாக்கத்தில் தொழிலாளர் அலுவலக வளாகம் திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாக கட்டடம் கட்டப்பட்டு 10-7-2023 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மனித நேயத்தில் பணியாளர் நலன் கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர் கழிப்பிடம், ஓய்வு அறை மற்றும் உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947 ஆம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் திராவிட மாடல் அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

சமரசப் பேச்சு வார்த்தையால் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு சமரச அலுவலர்களின் சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் 41 நிறுவனங்களில் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் விலக்கிக்கொள்ளப் பட்டு 13,825 தொழிலாளர்களின் உரிமை மற்றும் பணிகள் பாதுகாக்கப்பட்டன.

தொழில் பிரச்சினைகளில் தீர்வு சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்ட 2,930 வழக்குகள் உள்ளிட்ட 7,145 தொழில் பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகள் சார்ந்த வேலை நிறுத்தங்கள் திரும்பப் பெறப்பட்டன. கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு 669 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு ரூ.1 கோடியே 71 இலட்சம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. 889 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவினரிடமும், பெற்றோர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்

7,090 புதிய தொழிற்சாலைகள் பதிவு 1948-ம் ஆண்டைய தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் 7,090 தொழிற்சாலைகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,019 புதிய கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் பதிவு 1996-ம் ஆண்டைய கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள்

(முறைப்படுத்துதல் மற்றும் பணி நிலைமைகள்) சட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் 5,019 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொழிற்சாலைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சிகள் 76,341 தொழிற்சாலை பணியாளர்கள் பயனடையும் வகையில் 1,391 பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. தீவிபத்துக்களைத் தடுத்திட குழுக்கள் தீ மற்றும் தொழிற்சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு தலைமைச் செயலாளர்

தலைமையில் மாநில அளவிலான தீ மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழுவும் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (வேலை வாய்ப்பு பிரிவு) தன்னார்வப் பயிலும் வட்டங்களில் ரூ.10.08 கோடி செலவில் மூன்று ஆண்டுகளில் இத்தன்னார்வப் பயிலும் வட்டங்கள் நடத்திய பயிற்சி வகுப்புகளில் 5,138 நபர்கள் தேர்ச்சி பெற்று அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 56,564 பொதுப் பயனாளிகளுக்கு ரூ.86.59 கோடியும், 14,420 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.36.92 கோடியும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2,03,379 பேர் நியமனம்.

சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் நடத்தப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 2 இலட்சத்து 3 ஆயிரத்து 379 வேலை நாடுநர்கள் இந்த முகாம்கள் வாயிலாக தனியார் துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

கல்வித் தொலைக்காட்சி மூலம் தொழிலாளர்களுக்குப் பயிற்சிகள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக 20.3.2022 முதல் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 20.3.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளில், 1,228 மணி நேரப் பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (பயிற்சிப் பிரிவு)

நெய்வேலியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆதரவுடன் நெய்வேலியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 1-12-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.9.6 கோடியில் அரசு தொழிற் பயிற்சி நிலையக் கட்டங்கள்.

ரூ.9.6 கோடி செலவில் சிவகங்கை, காரைக்குடி, புள்ளம்பாடி (மகளிர்) ஆகிய மூன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விடுதிக் கட்டடங்கள் 1-12-2021 அன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளன. தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 2023 ஆம் ஆண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 94.58 சதவீதம் மாணவர் சேர்க்கையும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 48.06 சதவீதம் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளன.

வளாக நேர்காணலில் பணி நியமனங்கள் 2023 ஆம் ஆண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 81.00 சதவீதம் மாணவர்களும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 62.38 சதவீதம் மாணவர்களும் வளாக நேர்காணல் மூலம் பணியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

4 மாவட்டங்களில் திறன்பயிற்சி அலுவலகங்கள்

மாவட்ட அளவில் திறன் பயிற்சி நடவடிக்கைகளை கண்காணித்திட தென்காசி, செங்கல்பட்டு, திருவாரூர், இராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.2,877.43 கோடியில் 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்தில் தொழிற் பிரிவுகள் தொடக்கம், மாறிவரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு தனியார் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, ரூ.2,877.43 கோடி செலவில் 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டு 5,140 கூடுதல் இருக்கைகள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ரூ.20 கோடி செலவில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு புதிய எந்திரங்கள் தற்போதைய தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 57 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சீர் செய்ய இயலாத மற்றும் உபயோகமற்ற நிலையில் இருந்த இயந்திரங்கள். கருவிகள் மற்றும் தளவாடங்களை மாற்றி 20 கோடி ரூபாய் செலவில் புதிய மற்றும் நவீன இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் நிறுவப்பட்டுள்ளன. ரூ.97.55 கோடியில் 11 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் ரூ.97.55 கோடி செலவில் புதிதாக 11 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்பட்டு கூடுதலாக 1,104 மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.6.80 கோடி செலவில் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்குத் தமிழில் பாடநூல்கள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 6.80 கோடி ரூபாய் செலவில் தமிழில் பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) - 19 புதிய ஈட்டுறுதி மருந்தகங்கள்

71,832 காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் புதியதாக 19 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அரசு ஈட்டுறுதி மையங்களில் யோகா மற்றும் ஈட்டுறுதி சேவைகள் காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.45 கோடி செலவில், அயனாவரம் மதுரை, சிவகாசி, சேலம், ஓசூர். திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய ஏழு இடங்களில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டு தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்து வருவதால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இந்திய நாடு அளவில் சிறந்த முன்னேற்றங்களைக் கண்டு சாதனைகள் படைத்து வருவதை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருகின்றன.

Also Read: பாலியல் வழக்கில் கைதுக்கு பயந்து எலிபேஸ்ட் உண்டு தற்கொலைக்கு முயன்ற சிவராமன் : காவல்துறை விளக்கம் !