Tamilnadu

பெண் காவலர்களுக்கு அசத்தலான 2 முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

பின்ன சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் காவலர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்சனைகளை தீர்ப்பதில் நம்முடைய பெண்காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு 2 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Also Read: ”மக்களைப் பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!