Tamilnadu

மருத்துவப் படிப்பு - சிறப்பு பிரிவினருக்கு இன்று நேரடி கலந்தாய்வு: தமிழ்நாடு அரசு!

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கும் இன்று காலை நேரடி கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு, இன்று(22.8.2024) சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக கலந்தாய்வு நடைபெற தொடங்கியுள்ளது. அவ்வகையில்,இன்றைய கலந்தாய்விற்கு 1200 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர பொது பிரிவு கலந்தாய்வு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வங்கி விடுமுறை இருப்பதால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகள் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. எனவே, ஆகஸ்ட் 28ஆம் தேதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் 29ஆம் தேதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்பட்டு 30ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு அணைகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று 7.5% உள் ஒதுக்கீட்டில் வரும் அரசு பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் உள்ளிட்டோருக்கான நேரடி கலந்தாய்வும் தொடங்கியது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டு முதல் 7.5 சதவீதம் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் 622 இடங்கள் உள்ளது. அதில் எம்பிபிஎஸ் படிப்பில் 496 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 126 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிப் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 212 இடங்களும். பிடிஎஸ் படிப்பில் 11 இடங்களும் உள்ளது.

இதற்கு 133 மாணவர்கள் தகுதிப்பெற்றுள்ளனர். இதில் உள்ள மீதி இடங்கள் பொதுப்பிரிவிற்கு மாற்றப்படும். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 10 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1 இடமும் உள்ளது. இதில் 30 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுப் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 7 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் ஒரு இடம் உள்ளது. அதற்கு 15 விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Also Read: ECR கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? : அமைச்சர் எ.வ.வேலு தகவல் !