Tamilnadu
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான தமிழக அரசின் திட்டம் : உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகள் (12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி) கடந்த மாதம் முதல் காணவில்லை என்றும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இன்னும் கண்டறிய முடியவில்லை என்பதால் தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காணாமல் போனதாக கூறபட்ட மாணவியை கண்டுபிடித்து சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது
மாணவியிடம் விசாரணை செய்தபோது, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் தனது சக நண்பர்களுடன் தங்கி இருந்ததாகவும் கூறினார்.
மேலும் தான் தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், தனது பெற்றோரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமாரிடம், இந்த மாணவி மதுரையில் தங்கி கல்வி பயில உரிய ஏற்பாடு செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள். அதோடு மாணவியின் பாதுகாப்பு, கல்வி எந்த விதத்திலும் பாதிக்காத அளவில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, மாணவி தற்போது மதுரையில் உள்ள அரசு “பாலர் இல்லத்தில்” குழந்தைகள் நலக் காப்பகம் சார்பில் தங்க வைக்கப்பட ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்றும், மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் மாணவிக்கு உடனடியாக பாதுகாப்பான இடமும் கல்வியும் ஏற்பாடு செய்த அரசின் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமாருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மாணவிகள் பயன்பெறும் வகையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை பிரிவில் தமிழக அரசு உணவு, சீருடை, கல்வி என அனைத்தும் வழங்கும் இந்த திட்டம் மிகவும் பாராட்டத்தக்க திட்டம் இதனால் இது போன்ற மாணவிகள் பெரும் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து மாணவிக்கு கல்வி மற்றும் மனநலம் குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோருக்கு உரிய சட்ட ஆலோசனைகளை வழங்க மீண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!