Tamilnadu

தாம்பரம் ரயில் நிலைய சேவை வழக்கம் போல் இயங்க தொடங்கியது! : 16 நாட்கள் நடந்த சீரமைப்பு பணிகள் என்னென்ன?

தாம்பரம் ரயில் நிலையம், சென்னையின் மூன்றாவது ரயில் நிலைய முனையமாக செயல்பட்டு வருகிறது. தென்சென்னை மக்களுக்கு தாம்பரம் ரயில் நிலையம் முக்கிய பொது போக்குவரத்தாக விளங்குகிறது.

இந்நிலையில் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 3ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை ரயில் சேவைகள் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் ரயில்கள் இயங்கும் வகையில் இருந்ததால், செங்கல்பட்டு - கடற்கரை செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டனர்.

குறிப்பாக அலுவலகங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், கூலி வேலை செய்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தவித்து போயினர். மாற்று வழியாக, சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டன. எனினும், ஜி.எஸ்.டி.சாலையில் நெரிசல் என பேருந்து சேவையிலும் பொதுமக்கள் 16 நாட்கள் சிரமத்தோடு கடந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று (18.8.24) ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் முழுவதும் நிறைவுற்று, பிற்பகல் முதல் வழக்கம் போல் சேவை தொடங்கியது.

ரயில் நிலையத்தில் புதுபிக்கப்பட்ட பணிகள்,

நடைமேடை 7 மற்றும் 8 ஆகியவற்றை அகலபடுத்தி, புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டு, 24 ரயில் பெட்டிகள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்ல பேட்டரி வாகனம் இயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

9 மற்றும் 10 ஆவது நடைமேடைகளை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அப்பணிகள் முழுமையாக நிறைவுபெற்றது. புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டது, நடைமேம்பாலமும் கட்டி முடிக்கபட்டது.

தண்டவாளங்கள் "கிராஸ் டிராக்" கில் விரைவு ரயில் முன்பு செல்லும் போது 15 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், தற்போது அது 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் புதுபிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

Also Read: “இதுவாவது பழனிசாமிக்கு தெரியுமா?” - நீட் தேர்வுக்கு எதிராக திடீர் போராளியாக மாறிய முரசொலி கேள்வி!