Tamilnadu
“வித்தியாசம் கூட தெரியவில்லை” - அம்மா கிளினிக் விவகாரத்தில் ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சு. பதிலடி!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் ரோட்டரி கிளப் சங்கத்துடன் இணைந்து 10,000 பயனாளிகள் பயனடையும் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மக்கள் நல்வாழ்வு துறையில் தினம்தோறும் பல்வேறு வகையான புதிய புதிய கட்டமைப்புகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை ஒரு நூற்றாண்டைக் கடந்த பழமை வாய்ந்த மருத்துவமனையாகும்.
கடந்த காலங்களில் சென்னையை ஒட்டி இருக்கக்கூடிய புறநகர் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனை கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த மருத்துவமனையில் 26 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 36 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இருந்தது. தினம்தோறும் 1000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 1500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சைதாப்பேட்டை மருத்துவமனை, கொளத்தூர் புறநகர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளை இன்று மேம்படுத்தி அதற்கான புதிய கட்டிடங்களை தந்து அதிகளவில் படுக்கை வசதிகளை தந்து இன்று பிரம்மாண்ட மருத்துவ கட்டமைப்பாக ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறார்.
வருகிற ஜனவரி மாதம் இந்த பணிகள் நிறைவடைந்து தமிழ்நாட்டு முதல்வர் அவர்களால் இந்த மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. திறந்து வைக்கும் பொழுது 200 படுக்கைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை வழங்க உள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 1500 கோடி மேல் அரசாங்கம் தந்து இன்று ஒன்றிய அரசின் 'யூனிட்டட் இந்தியா இன்சூரன்ஸ்' அமைப்பு சார்பில், இந்த காப்பீட்டு திட்டம் என்பது ஏறத்தாழ 1 கோடியே 44 லட்சம் குடும்பங்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாக இருந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 15 லட்சத்து 70 ஆயிரத்து 322 பேர் சர்க்கரை நோயாளிகள் பயனடைந்துள்ளனர். சைதாப்பேட்டை மருத்துவத்துறையில் ஒரு புகழ்குடி நாட்டிக்கொண்டிருக்கிறது. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனர். இது ஒரு வரலாற்றுச் சாதனை.
ஒரு புதிய மருத்துவமனை கட்டப்பட்டு ஓராண்டுக்குள்ளாகவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்திருப்பது மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடையக் கூடிய ஒன்று. 75 ஆயிரத்து 316 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2800 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 9 லட்சத்து 19 ஆயிரத்து 84 இரத்த பரிசோதனைகள் நடைபெற்று இருக்கிறது.
திறந்து வைக்கப்பட்ட ஆறே மாதத்தில் 1,100 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. கலைஞர் எப்படி வாழ்நாள் முழுவதும் ஒரு சரித்திர சாதனை புருஷராக திகழ்ந்தாரோ, வாழ்ந்தாரோ அவருடைய பெயரால் திறக்கப்பட்ட இந்த மருத்துவமனை வரலாற்றுச் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க மருத்துவமனையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஒன்றிய மருத்துவத்துறை அமைச்சர் நட்டா இந்தியாவில் குரங்கமை இல்லை என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆடைகள் தவிர்த்து தெரிகிற உடல் பகுதியில் முகம் போன்ற பகுதியில் குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். பயணிகளுக்கு விழிப்புணர்வு சூப்பராகைகளை வைக்க சொல்லி உள்ளோம். நாளை மறுநாள் நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடைய ஆட்சி காலத்தில் செய்த சாதனையே தெரிந்து வைத்திருக்கவில்லை. 'அம்மா கிளினிக்' இருந்தது, 'அம்மா மருந்தகம்' என்று இல்லை. அம்மா உப்பு கடை என்று வைத்திருந்தார்கள். ஒன்றிய அரசின் 'மக்கள் மருந்தகம்' தமிழ்நாட்டில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. அம்மா மருந்தகம் என்று எந்த காலத்திலும் வைக்கவில்லை.
ஜெயக்குமார் எந்த நினைப்பில் சொல்கிறார் என்று தெரியவில்லை. அம்மா கிளினிக் இருந்தது, ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஆதாரத்தோடு ஒரு வருடத்திற்கு உண்டான அரசாணை பெற்று ஒரே ஒரு மருத்துவர் நியமனம் பெற்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையா மருத்துவமனைகளை வைத்தார்கள்.
இது சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமி பேசும்பொழுது சைதாப்பேட்டையில் ஒரு சுடுகாட்டில் வைத்துள்ளீர்கள் என்று சொன்னேன். உடனே இல்லை என்று கூறினார். நான் வாங்க அழைத்துச் சென்று காட்டுகிறேன் என்று தெரிவித்தேன். இன்னும் நாங்கள் அதைக் காட்சிப் பொருளாக வைத்துள்ளோம்.
அம்மா கிளினிக், பெரிய கட்டமைப்போடு விளங்கியது போலவும், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்தது போலவும், அம்மா கிளினிக் முடிவிட்டதால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிதைந்ததைப் போல எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அம்மா கிளினிக்கும், அம்மா மருந்தகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் காலத்தில் வந்தது என்று பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஒரு புனித நோக்கத்தோடு, முதல்வர் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள், தைப்பொங்கல் அன்று ஆயிரம் இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும், இந்தத் திட்டத்திற்கும் அம்மா மருந்தகம் என்ற பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அம்மா மருந்தகம் என்ற பெயரே இல்லை. எந்தத் துறையிலாவது அவர்கள் செய்ததை நாங்கள் செய்தோம் என்று சொல்ல முடியுமா.
திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் ஜெயலலிதா அம்மையார் திறந்து வைத்து கல் வெட்டு வைத்துக் கொண்டார்கள். சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகை, நான் இருந்த பொழுது 90 சதவீதம் முடிந்துவிட்டது. ஆட்சி மாறியவுடன் அதற்கு அம்மா மாளிகை என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்.
ஸ்டிக்கர் ஒட்டியது யார்? என்று நாட்டுக்குத் தெரியும். ஜெயக்குமாருக்கு தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. போலி மருத்துவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது மாட்டினால், அவர்கள் நிச்சயமாக சிறைக்கு செல்வார்கள், உரிய தண்டனை வழங்கப்படும்." என்றார்.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!