Tamilnadu

”நான் முதல்வன் திட்டத்தில் திறன்மிக்க மாணவர்களை உருவாக்குவதே லட்சியம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாநில அளவிலான ` நான் முதல்வன் திட்டம்' கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தரங்கில் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிப் பேசினார்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:-

இந்த மாபெரும் நிகழ்ச்சியானது, நம் பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொறியியல் மற்றும், கலை, அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளீர்கள்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழ்நாடு இன்றைக்கு மாபெரும் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை நம் மாணவர்களின் கல்விக்குத் துணை நிற்கும் விதமாக ஏராளமான திட்டங்களை நம் ‘திராவிட மாடல்' அரசு செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்', `புதுமைப்பெண் திட்டம்', `தமிழ்ப் புதல்வன் திட்டம்', `நான் முதல்வன் திட்டம்' போன்ற திட்டங்களில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘எல்லோரும் கல்லூரிக்கு வரவேண்டும். உயர்கல்வி பயில வேண்டும்' என்று முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவித்தார்கள். வங்கிகள் மூலம் கல்விக் கடன்களை வழங்கினார்கள். கல்விக் கடனுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்தார்கள்.

இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கும் போது அவர்களுக்கான முழு கல்விச் செலவையும், முதல் விமானப் பயணச் செலவையும் நம் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்ற சிறப்பான அறிவிப்பை அறிவித்துள்ளார்கள்.

இந்தியாவில் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்கிற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்ற திட்டத்தையும் அறிவித்துள்ளார்கள். புதுமைப்பெண் திட்டம் வந்த பிறகு உயர் கல்வியில் சேர்கிற மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் `கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ'வில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது. ஜி.இ.ஆர்-ஐ பொறுத்தவரை ஒட்டுமொத்த இந்திய நாடும் 58 சதவிகிதத்தைத் தாண்டுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், நம் தமிழ்நாடு 198 சதவிகிதத்தை எட்டுவதற்கான திட்டங்- களையெல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ரேங்க்கிங் ஃப்ரேம் வொர்க்' சார்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள மாநிலம், தமிழ்நாடு என்ற பெருமையை நம் மாநிலம் பெற்றிருக்கிறது. குறிப்பாக நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக, நம் அண்ணா பல்கலைக்கழகம் அந்தப் பெருமையை அடைந்திருக்கிறது.

அரசு ஏராளமான திட்டங்களை உருவாக்கித் தந்தாலும், அதனைக் களத்தில் செயல்படுத்தி, உயர் கல்வியில் தமிழ்நாட்டைத் தலைநிமிரச் செய்துள்ள உங்கள் அத்தனைப் பேருக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் வணங்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டம் நம் முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டம் மட்டுமல்ல. இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை நிறைவேற்றி வருகிற திட்டமாகவும் இந்தத் திட்டம் இங்கே உயர்ந்து நிற்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 31 லட்சம் இளைஞர்கள் பயன் பெற்றுள்ளார்கள். ஒரு லட்- சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.

இப்படி, உயர்கல்வியில், வேலைவாய்ப்பில் இன்னும் பல உயரங்களைத் தொட நான் முதல்வன்' திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டிய தேவை இருக்கிறது. `நான் முதல்வன்' திட்டம் எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது. இனி, எந்தத் திசையில் அது செல்ல வேண்டும். இன்னும் அதிகமான வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதே, இந்தக் கருத்தரங்கத்தின் ஒரே நோக்கம்.

கல்லூரிகளில் பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்துகின்றன. இதைத்தாண்டி ஒவ்வொரு மாணவரையும் திறன்மிக்க மாணவராக, வேலைவாய்ப்பைப் பெறுகின்ற திறமையைப் பெற்றவராக உருவாக்க வேண்டும். இதற்காகத்தான் `நான் முதல்வன்' திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.

குறிப்பாக, கேம்பஸ் இன்டர்வியூ நடத்த வேண்டும் என்றால், இரண்டு விஷய ங்கள் முக்கியம். ஒன்று நிறுவனங்கள் எதிர்பார்க்கிற திறன்கள் பெற்றவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். ஸ்கில்லேப், ஸ்கில் பேஸ்டு சிலபஸ் கோச்சிங், காலேஜ் ரேங்க்கிங் போன்றவை கல்லூரிகளுக்கு மிகமிக அவசியம். இவை இருந்தால்தான் நிறுவ னங்கள் கல்லூரிகளை நாடி வரும்.

இத்தகைய தரத்தை அடைய, ‘நான் முதல்வன்' திட்டம் என்றும் துணை நின்று வருகிறது. மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் சென்றடைய வேண்டும் என்றால், விரிவுரையாளர்கள் அந்தத் திறன் பயிற்சியைச் சொல்லித்தர வேண்டும். எனவேதான் பேராசிரியர்களுக்கும் விரிவுரை யாளர்க- ளுக்கும் இன்று `நான் முதல்வன்' திட்டப் பயிற்சிகளை வழங்குகிறோம்.

இது ஒரு கூட்டுமுயற்சி. கல்லூரிகளும் மாணவர்களும் தருகிற ஒத்துழைப்புதான் `நான் முதல்வன்' திட்டத்திற்கு உரிய பயன்களைத் தரும். எனவே, ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெடுப்புகளிலும், அனைத்துக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று நான் முதல்வன்' திட்டத்தை இன்னும் சிறப்புடன் செயல்படுத்த உங்கள் கருத்துரைகளை வழங்கியிருக்கிறீர்கள். அவற்றை கவனமுடன் பரிசீலித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் அடிப்படையில் இத்திட்டத்தினை மேம்படுத்திட, நம் கழக அரசு தயாராக இருக்கிறது.

தமிழ்நாட்டின் உயர்கல்வி இன்னும் பல உயரங்களைத் தொடுகிற வகையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இன்னும் பல லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சியையும், வேலை வாய்ப்பையும் பெற, நாம் அவர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம். மாநில அளவிலான இந்- தக் கருத்தரங்கம் வெற்றி பெறட்டும். இங்கு விருதுகளைப் பெற்றுள்ள கல்லூரிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு மீண்டும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்

Also Read: "சென்னையில் 400 கி.மீ நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !