Tamilnadu

"தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

தமிழகத்தில் மகப்பேறு இறப்பை குறைக்கும் வகையில் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களையும் 102 தாய் சேய் நல தொலைபேசி சேவை மூலம் கண்காணித்து மருத்துவ ரீதியாக உரிய அறிவுரைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்.வளாகத்தில் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களையும் 102 தாய் சேய் நல தொலைபேசி சேவை மூலம் கண்காணித்து மருத்துவ ரீதியாக உரிய அறிவுரைகள் வழங்கும் நிகழ்வை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "2024- 25 ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்த்துத்துறை மானிய கோரிக்கையில் 108அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 63-வது அறிவிப்புகளின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் 102 தாய் சேய் நல தொலைபேசி சேவை மையத்தின் மூலம் கண்காணித்து மருத்துவ ரீதியான உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தாய் சேய் நல சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது‌. இந்த சேவை மையத்தில் 50 ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த சேவையை வலுப்படுத்த ஒரு கோடியை 8 லட்சம் செலவில் கூடுதல் இருக்கைகள் சேவை மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்திலிருந்து ஆலோசகர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொடர்ந்து தொடர்பு கொள்வார்கள். ஒவ்வொரு தாய்மார்களும் குறைந்தபட்சம் 5 அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளப்படும். எதிர்காலத்தில் நிச்சயம் 100% கர்ப்பிணிகளையும் தொடர்பு கொண்டு அவர்கள் சிகிச்சைகள் உடல் நலம் தேவையான மருத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் மேல் நடவடிக்கைகளுக்கு இது உதவியாக இருக்கும் என்றார்.

பொதுவாக இந்த அழைப்பு உடனடியாக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் வட்டார மருத்துவர்கள் கர்ப்பிணி தாய்மார்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் அவர்கள் உடல் நலத்தை பற்றிய முழு விபரங்களும் அறியப்பட்டு முயற்சிகளுக்கு சீமாங் போன்ற மையங்களுக்கு பரிந்துரை செய்யவும், சிகிச்சை பெருபவரை கண்காணித்து அவர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவது குறித்து உறுதி செய்யப்படும். அதன் பின்னர் தான் இந்த அழைப்பு முழுமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படும்.

மாவட்ட சுகாதார அலுவலகங்களுக்கு மேல் நடவடிக்கைகளாக இந்த அழைப்பு மாற்றியமைக்கப்படும். இந்த அழைப்புக்கு மேல் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு இறப்பு என்பது மிகப்பெரிய அளவில் குறைந்து வருகின்றது. 2018 முதல் 2020 வரை கணக்கெடுப்பின்படி மகப்பேறு இறப்பு என்பது ஒரு லட்சம் பேரில் 58ல் இருந்து 54 ஆக குறைந்தது.

54 ஆக இருந்த இறப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி தொடர்ந்து கண்காணித்து தேவையான மருத்துவ உதவிகளை கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் மருத்துவர்கள் மூலமாகவும் தொடர்ந்து கண்காணித்த காரணத்தினால் இந்த ஆண்டு 45.5 ஆக குறைந்துள்ளது.

தேசிய அளவில் ஒரு லட்சம் மகப்பேறுகளுக்கு 70 இறப்புகள் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் 45.5 ஆக உள்ளது. இதை பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு மகப்பேறு எண்ணிக்கை ஒன்பது லட்சம் ஆக உள்ளது. அதாவது தமிழகத்தில் ஆண்டுக்கு 9 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றது...ஆகவே ஒன்பது லட்சம் தாய்மார்களையும் கண்காணிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கர்ப்பம் தரித்து ஆறு மாதத்திற்கும் மேலான கர்ப்பிணிகளின் பட்டியலை தயாரித்து, இந்த ஆலோசனை மையத்தின் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.

அந்த வகையில் இன்று நான்கு கர்ப்பிணிகளிடம் தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு இந்த திட்டம் குறித்து விளக்கினேன். அவர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தனர்.மகப்பேறு இறப்பை குறைக்கும் வகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற சிரமங்களை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் முக்கிய முயற்சியாக இந்த 102 திட்டம் தாய் சேய் நல சேவை திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு துறையில் இருக்கிற காலி பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகிறது இதில் ஏராளமான சவால்களும் நிறைந்துள்ளது. இந்தப் பணியில் எம்ஆர்பி மூலம் தேர்வு நடத்தி முறைப்படி வெளிப்படையாக பணி நியமனங்கள் செய்யப்படும்போது சில நபர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்த காரணத்தினால் காலதாமதம் ஏற்பட்டது. ஆகவே இந்த காலிப்பணியிடங்கள் குறித்தான வழக்கு பற்றி சட்டத்துறை விரைந்து செயல்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.‌ ஏற்கனவே 1021 மருத்துவ காலி பணி நியமனம் செய்யப்பட்டனர்.

946 மருந்தாளுனர்கள் பணியிடங்கள் நிரப்புவது நடவடிக்கை தொடங்கப்பட்டது.‌ இது சம்பந்தமாக 8 வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் இறுதி முடிவுக்கு வந்து கலந்தாய்வு முடிவு பெற்றுள்ளது. கலந்தாய்வு நடத்தி யார் யாருக்கு எங்கே பணி நியமனம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு அவர்களுக்கான பணி அணைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

வருகிற 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ‌கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் 946 மருந்தாளுனர்கள் பணியிடங்களுக்கு பணி ஆணைகளை வழங்க உள்ளார். தமிழக அரசின் சார்பில் அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் வாரியம் அமைப்பின் சார்பில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு தேவையான வகையில் 523 உதவியாளர் பணியிடங்களுக்கும் முதலமைச்சர் பணி ஆணைகளை வழங்க உள்ளார். Vocational counselor என்ற பொறுப்புக்கு 5 பணி ஆணைகள் என மொத்தம் 1,474 பணியாளர்களுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

Also Read: மருத்துவ கல்லூரிகளில் காலிபணியிடம் : அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சு. பதில்!