Tamilnadu

மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் - கனிமொழி MP !

தூத்துக்குடி சுந்தரவெல்புரத்தில், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட் சார்பில் ரூ. 13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், 27 லட்சத்தில் 80 கல்லூரி மாணவ - மாணவிகளுக்குக் கல்வி ஊக்கத் தொகையை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி, " கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு காலகட்டத்தில் நமக்கு எல்லாம் கல்வி மறுக்கப்பட்டு, சில பேர் மட்டும் தான் படிக்க முடியும், சில பேருக்குப் படிப்பிற்கான உரிமையே கிடையாது என்ற நிலை இருந்தது. அந்த காலகட்டத்தைத் தாண்டி இன்று எல்லாருக்குமே கல்வி என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எல்லாருக்கும் கல்வி என்ற அந்த கனவை நிறைவேற்றிக் கொண்ட நிலையை நாம் உருவாக்கி உள்ளோம். ஆனால், அதையும் தாண்டி படிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்குப் புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக உயர் கல்வி செல்லக்கூடிய பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இப்போது தமிழ் புதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், கல்லூரி முடிக்கப்படும் வரை வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகள் நன்றாக படிக்க தமிழ்நாடு அரசு தங்களின் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், நாம் எத்தனை மாணவர்களை படிக்க வைக்க முடியுமோ? அது தனிப்பட்ட முறையாக இருந்தாலும் அல்லது நிறுவனமாக இருந்தாலும், அந்த பணியை எல்லோரும் தொடர்ந்து செய்ய வேண்டும். கல்வி என்பது இந்த சமுதாயத்தின் மறுமலர்ச்சி" என்று கூறினார்.

Also Read: கலைஞரின் நூற்றாண்டு விழாவுக்காக தமிழ்நாடு அரசின் ஓராண்டு பணிகள் - முழு விவரம் !