Tamilnadu

”தியாகிகளுக்கு நினைவு சின்னங்கள் அமைத்து போற்றும் திராவிட மாடல் அரசு” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!

78-ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நம் நாட்டில் விடுதலைக்காக 300 ஆண்டுகளாய் நிகழ்ந்த நெடிய போராட்டங்களில் இன்னுயிர்களை ஈந்தும், உடல் உறுப்புகளை இழந்தும், சொத்து சுகங்கள், மனைவி மக்கள் அனைத்தையும் பறிகொடுத்தும், நம் நாட்டின் விடுதலையை நமக்குப் பெற்றுத் தந்த வீரதீரத் தியாக வேங்கைகள் அனைவருக்கும் நம்முடைய நன்றிகளைத் தெரிவிக்கும் அடையாளமாக வீர வணக்கம் செலுத்திடுவோம்! இன்று மட்டுமல்ல; என்றைக்கும் அந்த வீரத் தியாகிகளை நினைவுகூரும் வகையில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அவர்களுக்கெல்லாம் சிலைகள், மணிமண்டபங்கள் என நினைவுச் சின்னங்கள் அமைத்துப் போற்றி வருகிறோம்.

2021-இல் எனது தலைமையில் அமைந்திருக்கிற உங்கள் திராவிட மாடல் ஆட்சியில்;

* கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாருக்குக் கோயம்புத்தூரில் திருவுருவச்சிலை:

* விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் திருவுருவச் சிலை;

* நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு நாமக்கல் நகரில் சிலை;

* திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மணிமண்டபம்;

* குடியாத்தத்தில் விடுதலைப் போராட்ட தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்குத் திருவுருவச் சிலை

* தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் அவர்கள் மணிமண்டபத்தில் புதிய சிலைகள் - ஆகியவற்றை அமைத்துத் திறந்து வைத்துள்ளேன்.

* பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் இரண்டு மண்டபங்கள் அமைக்கும் பணிகள்;

* பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்குத் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகள்;

* வீராங்கனை குயிலி அவர்களுக்குச் சிவகங்கையில் திருவுருவச் சிலை நிறுவும் பணிகள்;

* விடுதலைப் போராட்ட வீரர் “வாளுக்குவேலி அம்பலம்” அவர்களுக்குச் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவச் சிலை நிறுவும் பணிகள்;

* தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைத்திடும் பணிகள்

- ஆகியவை நடைபெற்று வருகின்றன. இப்படி, எந்த மாநிலமும் செய்யாத முறையில் அனைத்துத் தியாகிகளையும் போற்றி வருகிறது தமிழ்நாடு. அந்தத் தியாகிகளின் கனவையும் நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு" என பட்டியலிட்டு பெருமையுடன் கூறினார்.

Also Read: ”தமிழ்நாட்டைத் தலைநிமிர வைப்பேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரத் திருநாள் விழாப் பேருரை!