Tamilnadu

தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்பு - கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு! - எங்கே ? எப்போது ?

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இது தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தது. அதன் அடிப்படையில் ஒன்றிய நிதி அமைச்சகம் இதனை பரிசீலித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 13-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.100 நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் கலைஞரின் நினைவு நாணையத்தின் ஒரு புறம் சிரித்த முகத்துடன், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 - 2024' என ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடபட்டுள்ளது.

மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வரும் 18-ம் தேதி மாலை 6.50 மணியளவில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, நாணயத்தை வெளியிடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை ஆற்றுகிறார்.

Also Read: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தில் "சட்டத் தமிழ்" பாடம்! : அமைச்சர் ரகுபதி!