Tamilnadu
மெட்ரோ ரயில் திட்டம் - வஞ்சகப் போக்கோடு செயல்படும் ஒன்றிய அரசு : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த ஒரு பைசா கூட நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை சிதைத்து, தம்மை தேர்தலில் தோற்கடித்த மக்களை பழிவாங்கும் உள்நோக்கம் கொண்ட இந்த வஞ்சகப் போக்கை சி.பி.ஐ(எம்) வன்மையாக கண்டிப்பதாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் முடிந்து, இரண்டாவது கட்டம் 119 கி.மீ தொலைவிற்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று பணிகள் ஒரு பகுதி முடிந்துள்ளன. இதுவரை ரூ.21 ஆயிரம் கோடிகள் செலவாகியுள்ளன. அதே சமயம், இந்த பணிகளுக்காக, ஒன்றிய அரசு தனது பங்கினை விடுவிக்கவில்லை என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை சுட்டிக்காட்டினார், கடிதங்களும் எழுதினார். தேர்தல் களத்திலும் கூட இந்த கேள்வி எதிரொலித்தது, அப்போதெல்லாம் கமுக்கமாக மௌனம் சாதித்த ஒன்றிய அரசு, இப்போது நாடாளுமன்றத்தில் கூறிய பதிலில், ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்காது என கூறியதுடன், மாநில அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு, ஒன்றிய அமைச்சர் தொகன் சாகு கொடுத்திருக்கும் பதிலில், மற்ற பல மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் நகரத்தில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டு கட்டங்களுக்கு ரூ.6400 கோடிகளுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சூரத் மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு 3 ஆண்டுகளில் ரூ. 4700 கோடிகள் கொடுத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 மெட்ரோ ரயில் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு ரூ.8,000 கோடிகள் தரப்பட்டுள்ளன.
ஏற்கனவே தில்லியில் இயங்கிவரும் மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கு ரூ. 11,000 கோடியும், பெங்களூருவில் செயல்படும் திட்டத்திற்கு ரூ. 16,000 கோடி, மும்பை நகரத்தின் மூன்றாவது கட்ட மெட்ரோவிற்கு மட்டுமே ரூ. 12,500 கோடிகள் என ஒன்றிய அரசின் நிதி கொடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒரு பைசா கூட நிதி தர முடியாது என்பது வஞ்சகமே ஆகும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு பின் அனுமதி பெற்ற சூரத் மற்றும் ஆக்ரா திட்டங்களுக்கு ஓராண்டில் ரூ.2,264 கோடிகளை ஒதுக்க முடிந்த மோடி ஆட்சியால், தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிப்பது ஏற்க முடியாததாகும்.
ரூ. 63,246 கோடிகள் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் மொத்த சுமையும் மாநில ஆட்சியின் மீதே சுமத்தப்படுவது அநீதி. கூட்டாட்சிக் கோட்பாட்டை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கை.
மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த சென்னையில் ஏற்கனவே தொடங்கி ஒரு பகுதி முடிந்திருக்கும் மெட்ரோ திட்டம், நிதிச் சுமையால் தாமதமானால் அதனால் ஏற்படும் அசவுகரியங்கள் மக்களை, போக்குவரத்தை, தொழில்களை மிகக் கடுமையாக பாதிக்கும். இதைத்தான் ஒன்றிய ஆட்சி எதிர்பார்க்கிறதா?
மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த சுமையையும் ஏற்பதால் மாநில அரசே அதற்காக கடன்களை பெற்று வட்டியையும் சுமக்க நேரிடும், கடனும் வட்டியும் மிக அதிகமானால் பட்ஜெட்டின் மற்ற திட்டங்கள் பாதிக்கப்படும்? அதைத்தான் ஒன்றிய ஆட்சி விரும்புகிறதா?
தனக்கு வாக்களிக்காத மாநிலங்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும் பாராமுகமாக கடந்துவரும் மோடி ஆட்சி, மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரியில் உரிய பங்கைக் கூட மறுத்து ஒட்டச் சுரண்டுகிறது. இப்போது ஒப்புக்கொண்ட திட்டங்களையும் செயல்படுத்தாமல் வஞ்சிக்கிறது.
ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்காக எடுக்கப்பட்ட நிலத்தில் வெற்றுச் செங்கல் நின்றுகொண்டு பல்லைக் காட்டுகிறது. இப்போது மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கும் நிதியை மறுத்து மாநிலத்திடம் தள்ளி விடுவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்தப் போக்கினை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த அநீதியை தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்துவதுடன், இந்த போக்கிற்கு எதிரான சாத்தியமான அனைத்து வழிகளிலும் போராடிட ஜனநாயக சக்திகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!