Tamilnadu
பொது இடங்களில் தமிழில் பதாகைகள் கட்டாயம்... மீறுவோருக்கு... - அமைச்சர் சாமிநாதன் பேட்டி !
சென்னை காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை அரசாணை வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் விழாப்பேருரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, "மாத உதவி தொகை வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள 100 நபர்களுக்கு மாதம் உதவி தொகை 3000 ரூபாயும் மருத்துவ செலவிற்காக 500 ரூபாயும், அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சென்று வருவதற்கு இலவச பேருந்து பயணமும் வழங்குகின்ற வகையில் அரசாணை வழங்கப்பட்டுள்ளது..
தமிழக முதலமைச்சர் தமிழ் வளர்ச்சிக்கென பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் இது போன்ற தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழறிஞர்களுக்கு வழங்குவதன் மூலம் தமிழ் மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் தமிழுக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டார். தமிழுக்கு வந்த இடர் பாடுகளை களைகின்ற வகையில் இந்தி என்ற போர்வை வந்த நேரத்தில், அதை விரட்டி அடைகின்ற வகையில் குரல் கொடுத்தவர் கலைஞர். தனது இறுதி மூச்சு வரை தமிழுக்கு பாடுபட்டவர், தமிழ் மொழி செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்தவர் கலைஞர். அவருடைய 6-ம் ஆண்டு நினைவு தினத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவி தொகை வழங்குவது சிறப்பான அம்சமாக பார்க்கப்படுகிறது.
பொது இடங்களில் வைக்கக்கூடிய பதாகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. அதற்கான நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் குறிப்பாக எந்த மொழி இருந்தாலும் தமிழ் மொழி குறிப்பிட்டுள்ள அளவுக்கு இடம் பெற்றிருக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு இருந்து வருகிறது. அதன்படி தற்போது அதனுடைய அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து அதற்கான நடவடிக்கை எடுக்கும். அதை மீறுவோர்கள் அபராதம் விதிப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்காது." என்றார்.
தொடர்ந்து திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள் அதற்கு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "நிச்சயமாக முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கு எந்த வகையில் தீர்வு காண முடியுமோ அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!