Tamilnadu

4ஆம் ஆண்டில் அடி எடுக்கும் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் : 5.93 கோடி பேர் பயன்!

கொரோனா காலக்கட்டத்தில், தி.மு.க அரசால் தொடங்கப்பட்ட “மக்களைத் தேடி மருத்துவம்” 3 ஆண்டுகளை நிறைவு செய்து, 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதனை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில், 4ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “சென்னையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு செல்வது சவாலாக உள்ளது. எனினும், இதுவரை 53 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு சென்னையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை கொண்டு செல்ல 104 என்கிற அவசர அவசர கால எண் இன்று (05.08.24) முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் இந்த எண்ணிற்கு அழைத்தால் அவர்களுக்கு சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 3000 திற்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட திட்ட செயல்பாட்டு அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் தொடர் சேவைகளையும், 1.8 கோடி பேர் முதல் முறை சேவையையும் பெற்று சுமார் 5.93 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் குளறுபடி : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 92 மனுக்கள் தாக்கல்!