Tamilnadu

“கல்லூரி தேர்தலில் நிற்க கூடாது என்றார்கள்” - லயோலா கல்லூரி நினைவுகளை பகிர்ந்த அமைசர் உதயநிதி!

சென்னையில் உள்ள பழமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றான லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெறுகிறது. இதில் முன்னாள் மாணவர் என்ற முறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், தமிழ்நாடு சிறுபான்மையின் நல வாரிய தலைவர் ஜோ அருண், லயோலா கல்லூரி அதிபர் அந்தோணி ராபின்சன், கல்லூரி முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ், விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

லயோலா கல்லூரியில் பயின்று பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் முன்னாள் மாணவர்களான இந்திய அரசின் முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணன், ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சந்தோஷ் மேத்யூ, கோல் பந்தாட்ட வீராங்கனை வித்யா பிள்ளை, பிரபல வயலின் கலைஞர் லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், முன்னாள் ஓய்வு பெற்ற IAS அதிகாரி பாலகோபால் சந்திரசேகர், திரைப்பட நடிகர் அரவிந்த்சாமி ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வாங்கி கௌரவித்தார்.

அப்போது மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "லயோலாவின் 100-வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்துகள். 3 நாட்களுக்கு முன்பு லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நான் முதலமைச்சராக வரவில்லை முன்னாள் மாணவரின் தந்தையாக வந்தேன் எனக் கூறினார். அதேப்போல்தான் நான் அமைச்சராகவே சட்டமன்ற உறுப்பினராகவோ இங்கு வரவல்வில்லை. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவராகவே இங்கு வந்துள்ளேன்.

பள்ளியில் 92% மார்க் பெற்று லயோலா கல்லூரியில் சேர எண்ணிய போது என்னை லயோலா கல்லூரியில் சேர்க்கவில்லை. அப்போது எனது தந்தை சட்டமன்ற உறுப்பினர் மட்டும்தான். தாத்தா முதலமைச்சராக கூட இல்லை.நான் பின்னர் எனது அம்மாவை அழைத்து வந்து கல்லூரியில் சீட் கேட்டேன்.

அப்போது கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் நடக்கும் தேர்தலில் நான் நிற்க கூடாது என என்னிடம் உறுதிப் பெற்றுக் கொண்டு கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், நான் இப்போது, தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இங்கு வந்துள்ளேன். இதற்கு லயோலாவின் வளர்ப்புதான் காரணம்" என்றார்.

Also Read: ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆபாச பேச்சு... சீமானுக்கு திருச்சி எஸ்.பி. நோட்டீஸ் !