Tamilnadu

மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியர் மற்றும் 10, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "உங்களை பார்க்கும் பொழுது அதே உற்சாகம் எங்களுக்கும் வந்துள்ளது. திராவிட இயக்கத்தில் இருந்து வரும் ஒவ்வொரு தொண்டனுக்கும் படிக்கின்ற மாணவர்களை பார்த்தால் ஒரு மகிழ்ச்சி வரும். தந்தை பெரியார் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு காரில் போய்க்கொண்டிருந்த போது அப்போது அந்தச் சாலையில் பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்ததை பார்த்து, ஒரு சின்ன குழந்தையை போல உற்சாகமாக பெண் குழந்தைகளை பார்த்து கைதட்டி ரசித்து மகிழ்ந்தார், இதற்கு தானே நான் காலம் முழுவதும் போராடினேன், திராவிட இயக்கத்தின் பலனை இதோ என் கண்ணாலையே பார்த்து விட்டேன் என்ற மகிழ்ச்சி தான் தந்தை பெரியாரை மகிழ்ச்சியில் துள்ள செய்தது...

பள்ளிக்குச் சென்ற மாணவிகளை பார்த்து தங்கள் பெரியார் மகிழ்ச்சி அடைந்தார். கலைஞர் ஆட்சிக்கு வந்த பொழுது மாணவ மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்லக்கூடாது என்பதற்காக இலவச பேருந்து அட்டையை வழங்கி, பேருந்தில் போக வைத்தார். தந்தை பெரியாருக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி தான் இன்று இங்கு வந்துள்ள மாணவர் செல்வங்களை பார்க்கும் போது, எங்கள் அத்தனை பேருக்கும் ஏற்படுகிறது. இந்த மகிழ்ச்சி அனைத்து நாளிலும் தொடர வேண்டும் என்பதுதான் நம்முடைய முதலமைச்சரின் ஒரே இலட்சியம்.

நம்முடைய குழந்தைகள் அனைவரும் பள்ளிப்படைப்பை நன்றாக படிக்க வேண்டும், பள்ளிப்படிப்பை முடிக்கின்ற அத்தனை மாணவர்களும் பள்ளிப்படிப்பு மட்டும் பத்தாது, உயர் கல்வியிலும் சேர வேண்டும். மருத்துவர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, அரசு அதிகாரிகளாக, பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதுதான் நம்முடைய முதலமைச்சர் திராவிட மாடல் அரசின் ஒரே லட்சியம்.அதற்கு ஏற்றவாறு தான் நம்முடைய முதலமைச்சர் பல திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார்...

முதலமைச்சர் அரசு பள்ளி, தனியார் பள்ளி என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது. தனியார் பள்ளிகளில் இருக்கும் அத்தனை வசதிகளும் அரசு பள்ளிகளுக்கும் வரவேண்டும் என்பதற்காக தான் ஒவ்வொரு திட்டத்தையும் முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்காக நம்முடைய திராவிட மாடல் அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமானது...

இன்று பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளில் சேராமல் இருக்கு மாணவர்கள் அவர்களை உயர்கல்வியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய அரசு தனி முயற்சி எடுத்து வருகிறது. அதைப்போல் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இந்த அரசு அனைத்து வகைகளிலும் உதவ தயாராக இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்கும் திறமையாளர்களுக்கு உதவிட இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை ஒரு வருடத்தில் ரூபாய் பத்து கோடி அளவில் உயரிய ஊக்கத் தொகை நிதி உதவி வழங்கப்படுகிறது...

சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கின்ற மாணவர்களுக்கு உயரிய உக்கத்தொகை வழங்கி தமிழ்நாடு அரசு கவுரப்படுத்தி ஊக்கப்படுத்தி வருகிறது. இன்று பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ள பள்ளி மாணவர்கள் நாளை தமிழ்நாட்டிற்கு பெருமை சார்க்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் கோப்பைகளைப் பெற வேண்டும். அதற்கு என்னென்ன தேவையோ அதை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.

மாணவர்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் மட்டும் நன்றாக கவனம் செலுத்துங்கள். படிப்பு என்றால் பாடத்தில் இருப்பதை மட்டுமே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவது கல்வி என்று கிடையாது. உண்மையான படிப்பு என்றால் பாடத்தில் உள்ளதை நன்றாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும். அறிவை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அனைத்து இடங்களிலும் மரியாதையும் சிறப்பும் தானாக கிடைக்கும், அறிவை பயன்படுத்தாமல் இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சென்னையில் திறந்து வைத்தார்கள், நம்முடைய அமைச்சர் அவர்கள் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

10 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் அந்த நூலகத்திற்கு சென்று படித்துள்ளனர், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலைஞர் நூலகத்திற்கு மாணவர்கள் படையெடுக்கிறார்கள். விரைவில் கோவையிலும் திருச்சியிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய உள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி வறுமையில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்தச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வித் கட்டணத்தை ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் முந்தைய ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு இந்த தொகை தாமதமாக வழங்கப்பட்டு வந்தது. திராவிட மாடல அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் 1200 கோடி ரூபாயை பள்ளிகளுக்கு வழங்க அரசாணை வெளியிட்டு அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இனி வரும் கல்வி ஆண்டுகளில் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் அந்தந்த ஆண்டு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளின் வளர்ச்சி மட்டும் இல்லாமல் தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும் திராவிட மாநகர அரசு என்றைக்கும் துணை நிற்கும்.. கேலோ இந்தியா போட்டியில் முதல்முறையாக தமிழ்நாடு பறக்க பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. கல்வி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உடற்பயிற்சும் விளையாட்டு முக்கியம். நன்றாக விளையாடும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம் கண்டிப்பாக இருக்கும், நல்ல ஆரோக்கியம் இருந்தால் நன்றாக படிப்பார்கள்.. எனவே விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி கணக்கு, அறிவியல் வகுப்பை நடத்தவேண்டாம்" என்று கூறினார்.

Also Read: "கடமையை ஆற்றவில்லை, ஆளுநர்களை கட்சி அரசியலுக்கு அப்பால் வைக்க வேண்டும்" - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து !