Tamilnadu
குழந்தைகளுக்கு தடுப்பூசி : தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்த நடவடிக்கை - அமைச்சர் மா.சு தகவல்!
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ பணியாளர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். அதன் பின்னர் அமைச்சர் தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, " ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் உலக தாய்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இன்று தொடங்கி 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளில் இந்த உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள், குடும்ப உருப்பினர்கள் மற்றும் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தாய்ப்பால் ஊட்டலை மேம்படுத்துதல், தாய்ப்பால் கொடுப்பதற்கான சூழலை உருவாக்குதல், தாய்ப்பால் ஊட்டலை எளிமைப்படுத்துதல் என தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
இது இளம் சிசு இறப்பு விகிதத்தை ஏறத்தாழ 20 சதவீதம் தடுக்கும் வல்லமை வாய்ந்தது. தாய்ப்பால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை 13 சதவிகிதம் தடுக்க உதவியாக இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சி ழூலம் தெரிவித்து இருக்கின்றனர். வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பிற்கான வாய்ப்புகளை 11 மடங்கு தாய்ப்பால் குறைக்கிறது. நிமோனியா மூலம் ஏற்படும் இறப்பிற்கான வாய்ப்புகளை 15 மடங்கு குறைக்க வல்லது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி, தொற்று நோய் என பலதுக்கும் தாய்ப்பால் நல்லது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் படி 2016 - 17 ஆண்டுகளில் பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கூட்டும் விகிதம் என்பது 54.7 ஆக இருந்தது, அதுவே 2020 - 21 ஆண்டுகளில் 60.2 ஆக உயர்ந்துள்ளது ( குழந்தை பிறந்து தாய்ப்பால் ஊட்டும் விகிதம்). 2016 - 17 ஆம் ஆண்டுகளில் 6 மாதத்திற்கு தாய்ப்பால் ஊட்டும் சதவீதம் 48.3 ஆக இருந்தது, தற்போது 55.1 ஆக உயர்ந்துள்ளது..
தாய்ப்பால் ஊட்டுதலில் உள்ள இடைவெளியை தவிர்ப்போம், தாய்ப்பால் ஊட்டுதலை ஆதரிப்போம் என இந்த ஆண்டு உலக தாய்பால் கருத்துரு ஆக உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள் சார்பில் தற்போது குழந்தைகளுக்கு 11 தடுப்பூசிகளும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து தனியார் மருத்துவமனைகளும் இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தனியார் மருத்துவமனைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
சேவை மனப்பான்மையோடு இலவசமாக எந்த மருத்துவமனை இந்த தடுப்பூசிகளை செலுத்த முன் வருகிறதோ, அந்த மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கி விரைவில் 11 தடுப்பூசிகளும் இலவசமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கும் நடைமுறை தொடங்கப்படும்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்று இயங்கும் அனைத்து மருத்துவ கல்லூரிகளின் பணி புரியும் ஆசிரியர்கள் விபரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளிப்படாமல் இருந்தால் அதனை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். போலி மருத்துவர்கள் இருப்பதை கண்டறியப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பேருந்து நிலையங்களில் இருக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை உரிய வசதிகளுடன் பராமரிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக பணி நியமனத்திற்கு இடையே தடைகள் என்பது உயர்நீதிமன்றத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. அதனை சட்டத்துறை சார்பில் கண்காணித்து வருகிறோம், மிக விரைவு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கும் பட்சத்தில் விரைந்து அவர்களுக்கு வெளிப்படை தன்மையோடு பணி ஆணைகள் வழங்கப்படும்.
வயநாடு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்கள் கிராமங்களுக்கு தேவையான மருத்துவ வசதி செய்வது இதுபோன்ற பணிகளை செய்வதற்கு மருந்துகளுடன் ஏற்கனவே வாகனங்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து மருத்துவர்கள் தலைமையிலான குழுக்கள் அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அங்கு கூடுதல் உதவி தேவைப்படுமானால் தகவல் தெரியப்படுத்த கூறியுள்ளோம்." என்றார்.
Also Read
-
“கிண்டி மருத்துவமனை மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
234 தொகுதிகளிலும் ஆய்வுகள் நிறைவு! : ஆய்வு அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் தகவல்!
-
இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : பெரும்பான்மை பெறுவாரா அதிபர் அநுர குமார திசநாயக்கே ?
-
தொழுவதற்கு உரிமை கேட்ட இடத்தில் தொடுவதற்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திமுக - திருச்சி சிவா MP பேச்சு !
-
உயர்நீதிமன்ற வளாகத்தில் அர்ஜுன் சம்பத் மகன் கைது! : வெறுப்பு பேச்சு சர்ச்சையானதையடுத்து நடவடிக்கை!