Tamilnadu

வருமானத்துக்கு அதிகமாக சொத்து : அதிமுக முன்னாள் MLA RP பரமசிவத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

கடந்த 1991 - 1996 ஆம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதி MLA-வாக இருந்த ஆர்.பி.பரமசிவம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.28 லட்சத்து 76 ஆயிரம் அளவுக்கு சொத்துகள் சேர்த்துள்ளதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த 1998 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

பரமசிவம் மற்றும் அவரது மனைவி பூங்கொடிக்கு எதிரான இந்த வழக்கை விழுப்புரம் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, கடந்த 2017 ஆம் ஆண்டு பரமசிவத்தின் மனைவி பூங்கொடி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அவரது பெயர், வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.

பரமசிவத்துக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.33 லட்சத்து 4 ஆயிரத்து 168 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

பரமசிவம் எம்.எல்.ஏ.வாக இருந்த காலகட்டத்தில் அவர் பெயரிலும், அவரது மனைவி பூங்கொடி, மகன்கள் மயில்வாகனம், பாபு மற்றும் கோவிந்தன் ஆகியோரின் பெயரிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம் எல்.ஏ. பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெய்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் S.உதயகுமார் ஆஜராகி வாதங்களை வைத்தார். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை கணக்கிடும் போது, ரூ.26 லட்சம் என்ற அளவில் உள்ளதாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார்.

மேலும், அபராதத் தொகையை 33 லட்சம் ரூபாயில் இருந்து 26 லட்சம் ரூபாயாக குறைத்த நீதிபதி, சொத்துகள் முடக்கம் செய்யும்படி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். கூடுதலாக செலுத்தப்பட்ட அபராதத் தொகையை திருப்பி வழங்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, ஏற்கனவே அனுபவித்த தண்டனை காலத்தையும் கழித்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: ”சாதி அற்றவராக வாழ்வதுதான் பெருமை” : மக்களவையில் கனிமொழி MP அனல் பேச்சு!