Tamilnadu

”தி.மு.க ஆட்சியில் ஆன்மீகத்திற்கு தடையில்லை” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.இதில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆம் ஆண்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்ட https://muthamizhmuruganmaanadu2024.com இணையதளம் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " பழனியில் ஆகஸ்ட் 24,25 ஆம் தேதி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர். ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

அறுபடை வீடுகளின் அரங்கங்கள், சிறப்புப் புகைப்பட கண்காட்சி. வேல்கோட்டம், 3D நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், ஆன்மிக கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்ற அம்சங்களுடன் இம்மாநாட்டிற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. இந்த ஆட்சியில் ஆன்மீகத்திற்கு எந்த விதத்திலும் தடையில்லை என்பது ஒன்று. இரண்டாவது தமிழுக்கு பெருமை சேர்க்க கூடிய அரசாக தி.மு.க அரசு திகழ்கிறது. அனைவரும் சமம் என்பதை இம்மாநாடு உணர்த்தும் வகையில் இருக்கும். " என தெரிவித்துள்ளார்.

Also Read: "எக்காரணம் கொண்டும் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது" - போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி !