Tamilnadu
“தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பார்ப்பதுதான் ஹெச்.ராஜாவின் வேலை” - செல்வப்பெருந்தகை தாக்கு !
சென்னை, இராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் அதிமுக நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை, மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், அதிமுகவில் இருந்து வடசென்னை கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட 20 பேரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "நீட் தேர்வு முறைக்கேட்டில் பல இடங்களில் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாக வெளிவந்துள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வில் காங்கிரஸ் செய்த குளறுபடிகளை சரிசெய்வதாக கூறி வருகிறார். உண்மைக்கு புறம்பான செய்திகளை அவர் கூறி வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு வரவில்லை, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து நீட் தேர்வை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என பொய் பரப்பும் கோயபல்ஸ் வேலையை செய்து வருகிறது. இதுகுறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசே ஆர்.எஸ்.எஸ்.தான் நிர்வகித்து வழிநடத்துகிறது. ஒன்றிய அரசை ஆட்சி நடத்துவது ஆர்.எஸ்.எஸ்.தான். பிரதமர் மோடி அதன் முகமாகவே உள்ளார். அம்பேத்கர், எம்.சி.ராஜா, மீனம்பாள் சிவராஜ், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்தி தாசர் ஆகியோரை படித்தவகையில் 100% தலித் ஒற்றுமை இதுவரை வந்ததில்லை.
அம்பேத்கர் காலத்திலேயே தலித் தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. அம்பேத்கர் மட்டுமே ஒரே தலைவராக இருந்தது. தலித் மக்கள் ஒரே குடையின் கீழ் இணைவது என்பது நல்ல முயற்சிதான். தலித் ஒன்றிணைப்புக்கு அம்பேத்கர் போன்று தனித்துவமாக இருக்க வேண்டும். அம்பேத்கர் கடைசிவரை காங்கிரஸ் கட்சி உடன் மட்டுமே பயணித்தார். காங்கிரஸ் உடன்தான் அவரது பயணம் இருந்தது.
பெரிய சமூகம் எனக்கூறியவர்கள் அம்பேத்கரின் கீழ் பணியாற்றினார்கள். இந்த சமூக கட்டமைப்பை காங்கிரஸ் கட்சியால்தான் செயல்படுத்த முடியும். இதனை ஆர்.எஸ்.எஸ்., பாஜகவால் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு என்று தனித்துவம் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்து செல்வது காங்கிரஸ் கட்சிதான்.
அரசியலமைப்புப்படி எஸ்.டி., எஸ்.சி., பிரிவினருக்கென்று சட்ட உரிமை உள்ளது. விகிதாச்சார உரிமைகளின் படி இடஒதுக்கீடு உள்ளது. அவருக்கான துறைகள் ஒதுக்கீடு குறித்து எந்த விதிமுறைகளும் இல்லை. காங்கிரஸ் கட்சிதான் முக்கிய துறைகளை தலித் தலைவர்களுக்கு அளித்துள்ளது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க கூடாது எனத் தீர்மானிக்க ஹெச்.ராஜா யார்? திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் அதனை தீர்மானிக்க வேண்டும். ஹெச்.ராஜா இதனை கூறுவதற்கு யார், அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?.
அரசியலமைப்பு படி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததை, முதலமைச்சரின் முடிவுப்படி ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைப்பார். பாஜகவிற்கு மத அரசியல் செய்வதுதான் நோக்கம். மக்கள் குறித்து பாஜக பேசுவதேயில்லை. தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பார்ப்பதுதான் ஹெச்.ராஜாவின் வேலை." என்றார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!