Tamilnadu

"பொறாமையில் புலம்பித் தவிக்கும் பழனிசாமி" : மேயர் பிரியா பதிலடி!

சென்னை மாநகராட்சி 122ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை ஜூலை 188 ஆம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது,அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு இருந்த பயனாளிகளோடும் உரையாடினார்.

இதனைத் தொடர்ந்து அம்மா உணவகங்களை மேம்படுத்திட ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்று பார்க்காமல் மக்கள் பசியை போக்கும் திட்டமாக அம்மா உணவகத்தை பார்ப்பதால்தான் இந்த திட்டத்தை இன்னும் மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஆய்வை விமர்சித்துள்ளார்.

இதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்களின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை!

கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்கள்;

அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில்

முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: அம்மா உணவகங்களை மேம்படுத்திட ரூ.21 கோடி நிதி : ஆய்வுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!