Tamilnadu

45-ஆம் ஆண்டில் தி.மு.க இளைஞர் அணி : ஓர் அரசியல் இயக்கத்தின் வரலாறு!

இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஓர் அரசியல் இயக்கம், தனக்கான இளைஞர் அணியைத் தோற்றுவித்தது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான். கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தம் செய்யும் நிலையத்தில், நம்முடைய மாண்புமிகு. முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் 1968 -ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.' தான் கழகத்தின் நாற்றங்காலாக விளங்கும் இளைஞர் அணியின் தாய்விதை. 1980-ம் ஆண்டு மதுரை 'ஜான்சி ராணி பூங்கா'வில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தி.மு.க. இளைஞர் அணியை மு.க.ஸ்டாலின் தி.மு.கழகத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் தொடங்கினார்கள்.

தொடர்ந்து, 1982-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு விழாவில், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டார்.

நம் கழகத் தலைவர் அவர்கள், அன்றைய இளைஞர் அணி அமைப்பாளராக தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பயணித்து, தமிழகத்தில் திராவிட சிந்தனைமிக்க இளைஞர்களையும் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து இளைஞர் அணியையும்-கழகத்தையும் வலுப்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் தலைவர் அவர்கள் பம்பரமாய் சுற்றிச்சுழன்ற உழைப்பும் பங்களிப்பும் விரைவிலேயே அவரை இளைஞர் அணியின் செயலாளர் எனும் பொறுப்பில் அமர்த்தியது. தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.கழகத்தின்பால் பற்றும் கொள்கைப்பிடிப்பும் மிக்க இளைஞர்களை மிகச்சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கும் பணிப்பொறுப்புகளை வழங்கி, இயக்கத்தை வலுப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, மூன்று பத்தாண்டுகள் இளைஞர் அணியின் செயலாளராக கழகத்தின் நோக்கங்களை, செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் உற்றத்துணையாக இருந்ததுடன் போராட்டங்களிலும், பேரணிகளிலும், மாநாடுகளிலும் தேர்தல்களிலும் இளைஞர் அணியின் பங்குப் பணியை உறுதிப்படுத்தினார்.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்ந்து, வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்கள் இளைஞர் அணிச் செயலாளராக சிறப்புற செயல்பட்டார். 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கழக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்.

இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பணிப் பொறுப்பை ஏற்றதும், இளைஞர் அணியில் 30 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்ததுடன், அதற்கான பணியையும் தொடங்கி, அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார், உதயநிதி ஸ்டாலின். இளைஞர் அணி தொடங்கப்பட்டு, இன்றைக்கு மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் சாரை சாரையாக கழக இளைஞர் அணியில் இணைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் மேன்மைக்காக உழைத்து வருகின்றனர்.

Also Read: "2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம்" - கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை !