Tamilnadu

கேரளாவில் 40 நாட்களாக பதுங்கியிருந்த MR விஜயபாஸ்கர்... தட்டி தூக்கிய CBCID போலீஸ்!

கரூரில், பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் போலி ஆவணம் மூலம் மோசடியாக 4 பேர்கள் மீது பத்திர பதிவு செய்து கொண்டனர் என்று கரூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அதன்பேரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில், கடந்த 25ம் மனு தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின் போது உடனிருக்க வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு ஜூலை 1-ம் தேதி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வழக்கு நீதிமன்றத்தில் ஜூலை 6 நடைபெற்ற நிலையில், அவரது முன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே கடந்த 5-ம் தேதி கரூரில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து ஜூலை 7-ம் தேதி அவருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையே தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூருக்கு அழைத்து வந்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: 9.5 லட்ச வாசகர்கள்... ஓராண்டை நிறைவு செய்யும் உலக தரத்தில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் !