Tamilnadu
நடிகை கௌதமியின் ரூ.25 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு - பாஜக பிரமுகர் அழகப்பன் மீண்டும் கைது!
பிரபல நடிகையும் பாஜக முன்னாள் பிரமுகருமான கௌதமி, தான் சினிமா துறையில் சம்பாதித்த சொத்துகளை நிர்வகிப்பதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும் அழகப்பன் என்பவரை நாடியுள்ளார். அதாவது கௌதமியின் சுமார் 8.3 ஏக்கர் நிலத்தினை விற்று தருவதாக கூறி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பலராமன் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ரகுநாதன், அழகப்பன் ஆகியோர் கௌதமியிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கு பொது அதிகாரத்தை பெற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த இடத்தினையும் அதன் அருகில் உள்ள மற்ற இடங்களையும் சேர்த்து மும்பை சேர்ந்த Jaya Hind Investments (P) Ltd., என்ற நிறுவனத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விற்பனை செய்து விட்டு, நடிகை கெளதமிக்கு ரூ. 4.10 கோடி மட்டும் விற்பனை தொகையாக கொடுத்துள்ளார் அழகப்பன்.
அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்த பிறகு தான், தனக்கு சொந்தமான இடத்தினை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்து விட்டு தனக்கு வெறும் ரூ. 4.10 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றிய விவரம் கௌதமிக்கு தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் போலீசால் புகார் அளித்தார்.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பனுக்கு பாஜக ஆதரவு தருவதாக கூறி, அக்கட்சியில் இருந்தும் அதிரடியாக விளக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், அவரது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது, நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அழகப்பன் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தேடி வந்த நிலையில், கேரளாவில் பதுங்கி இருந்த அழகப்பன் மற்றும் குடும்பத்தினர் என ஆறு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்கள் கழித்து இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் மட்டுமல்லாது திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் என அழகப்பன் மூலம் நடிகை கௌதமியின் சொத்துகள் அபகரிக்கப்பட்ட இடங்களில் தனித் தனியாக நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் நடிகை கௌதமி இரண்டு புகார்களை அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன், ரகுநாதன், சுகுமாரன், பலராமன் ஆகிய நான்கு பேர் மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூரில் உள்ள ரூ.1.07 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை கவனித்துக் கொள்வதாக பவர் அதிகாரம் பெற்று ரூ.60 லட்சத்துக்கு மோசடியாக விற்பனை செய்ததுடன் அதற்கான தொகையையும் தனக்கு கொடுக்கவில்லை என்று கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில் அழகப்பன், பலராமன் ஆகிய 2 பேர்மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் கௌதமியின் சகோதரர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் அழகப்பன் தனி அதிகாரம் பெற்று ரூ.60 லட்சத்துக்கு விற்றுள்ளார். பின்னர் இதனை சில மாதங்கள் கழித்து ரூ.1 கோடி 63 லட்சத்துக்கு விற்றுள்ளனர். மோசடியாக விற்பனை செய்ததுடன், அந்தத் தொகையையும் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை. இது தொடர்பாக கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன், சுகுமார், ரகுநாதன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிபந்தனை சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் ஜாமீனில் இருக்கும் அழகப்பனை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்று மற்ற மாவட்டங்களில் போடப்பட்ட வழக்குகளிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!