Tamilnadu

ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் : பாஜக மூத்த நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

அண்மையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தமிழ்நாடு முழுவதும் மார்ச் - ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தாம்பரம் இரயில் நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், அந்த மூன்று பேரில் முக்கிய நபர் நயினாருக்கு சொந்தமான ஹோட்டலின் ஊழியர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து நயினார் நாகேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த வழக்கில் அடுத்தடுத்து என பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வந்த நிலையில், தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோரும் சிக்கினர்.

தொடர்ந்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும் பலரது வீடுகளிலும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கேசவ விநாயகத்தின் செல்போன் உள்ளிட்டவற்றை ஒப்படைக்கவும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயத்தை விசாரணைக்கு அழைக்கக் கூடாது என்றும், தங்களது அனுமதியுடனே கேசவ விநாயகத்தை விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த ஜூன் 5-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுதான் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள முடியுமா? இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட “ஹார்ட் டிஸ்க்” காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக கேசவ விநாயகத்திடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிமன்றம், பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. முன்னதாக ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூலை 11-ம் தேதி விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு” - அமைச்சர் பொன்முடி!