Tamilnadu

“மக்கள் இதயங்களில் நிறைந்திருக்கும் எங்கள் தலைவரால் கிடைத்த வெற்றி” - அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 2024-25ஆம் ஆண்டு அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ சாலையில் புதிதாக அமையுள்ள சமுதாய நலக்கூடம், ஆர். கே. நகர் சட்டமன்ற தொகுதி இளையா தெருவில் அமையவுள்ள விளையாட்டுத் திடல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமையவுள்ள சமுதாய நலக்கூடம், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கத்தில் அமையவுள்ள பன்னோக்கு மையம், சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரில் அமையவுள்ள சிறுவர் விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, "வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொடர் ஆய்வு நடைபெற்ற வருகிறது. வடசென்னையில் மொத்தம் 219 திட்டங்கள் 4378 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டன அதில் 100 பணிகள் நடைபெற்று வருகிறது, மீதமுள்ள 119 பணிகள் வெகு விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் வெகுவிரைவாக தொடங்க உள்ளது.

முதலமைச்சரின் பாதை செயல்களை பொறுத்தவரை இன்னார் இனியவர் என்று இல்லாமல் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய வகையில், தேர்தல் முடிந்தவுடன் அவர் சொன்ன வார்த்தை வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து அமைந்திருக்க கூடிய அரசு. இந்த அரசு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைகின்ற வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு நாம் வாக்களிக்காமல் தவறிவிட்டோமே என்று வருத்தப்படுகின்ற அளவுக்கு எங்களுடைய பணிகள் இருக்கும் என்றார் முதலமைச்சர்.

அன்றைய வார்த்தைக்கு எடுத்துக்காட்டு தான் இன்று விக்கிரவாண்டியில் மாற்றுக் கட்சியினரும் திமுகவை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள். முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்களால் மக்கள் நலன் முதல்வர் என்று ஒரு மகத்தான பெயரோடு ஒன்றியமே திரும்பிப் பார்க்கின்ற அளவில் ஒரு வலுவான தலைவராக இந்தியா கூட்டணியின் வலிமைமிக்க தலைவராக தமிழ்நாட்டில் அவர் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் 7 ஆண்டுகளுக்கு மேல் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்ற ஒரு அரசியல் தீர்க்கதரிசியாக மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்து இருக்கின்ற ஒரு தலைவர் அந்த தலைவரால் கிடைக்கப் பெற்ற வெற்றியாக இதை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா கூட்டணி அனைத்து இடங்களில் வெல்லும். இந்தியாவில் இருக்கின்ற அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணியின் பெயரைச் சொல்லும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் உள்ளது. இன்னார் இனியவர் என்று இல்லாமல் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தருவோம் என்று முதல்வர் கூறியுள்ளார். நிச்சயம் இந்த ஆட்சியை பொருத்தவரை நீதியின் பக்கம் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தப்ப விட மாட்டார்கள். சீமான் வாய்க்கொழுப்பிற்கு அடுத்தடுத்த தேர்தலில் மக்கள் இன்னும் அதிகமான பாடங்களை கற்பிக்க தயாராக இருக்கிறார்கள்" என்றார்.

Also Read: ”சர்வாதிகாரத்தை ஒழிக்க விரும்பும் மக்கள்” : 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகளை சுட்டிகாட்டும் ராகுல் காந்தி!