Tamilnadu

மக்களை தேடி வரும் அரசு... மக்களோடு மக்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் : முரசொலி பாராட்டு !

முரசொலி தலையங்கம் (13.7.2024)

மக்களோடு மக்களாக முதல்வர்!

மக்களுக்காக உழைத்து, மக்களுடனே வாழ்ந்து. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு –- மக்களாட்சியை நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கிய மகத்தான திட்டங்களில் ஒன்று ‘மக்களுடன் முதல்வர்’ என்ற இந்த மாபெரும் திட்டம்! சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை தி.மு.க. தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திரட்டினார்கள். ‘திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து சாத்தியமான அனைத்துத் திட்டத்தையும் உருவாக்கித் தருவேன்’ என்று வாக்குறுதி தந்தார்கள். மாண்புமிகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் – ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனித்துறையை உருவாக்கி அந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலான வேண்டுகோள்களை நிறைவேற்றியும் வைத்த சாதனை முதலமைச்சர் தான் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தேர்தலுக்கு முன்னதாக வாங்கிய மனுக்களுக்குத் தீர்வு கண்டதோடு, தனது வாக்குறுதி நிறைவேறிவிட்டதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நினைக்கவில்லை. ‘வேண்டுகோள்களே’ இல்லாத வகையில் தமிழ்நாடு அமைய வேண்டும் என்று நினைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற தனித்துறையை உருவாக்கினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.‘முதல்வரின் முகவரி’ என்ற துறையின்கீழ் கடந்த மூன்றாண்டு காலத்தில் 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களாட்சியின் மாபெரும் சாதனை இது. மக்கள் தங்களது கோரிக்கைகளை அனுப்பினால் மட்டுமே நடவடிக்கை என்பதாக இல்லாமல், கோரிக்கை மனுக்களை அரசாங்கமே மக்களது இருப்பிடத்துக்குச் சென்று வாங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் நினைத்தார்கள். அதற்காக உருவாக்கப்பட்டதுதான், ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டமாகும்.

பொதுமக்கள் அதிகமாகத் தொடர்பு கொள்ளும் 15 அரசுத் துறைகள் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் முகாம்கள் மூலமாகப் பெற்று அந்தக் கோரிக்கைகள் 30 நாட்களுக்குள் நிறைவேற்றித் தரப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். முதலில் நகராட்சிப் பகுதியில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. 8.74 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. அடுத்து ஊராட்சிப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் (ஜூலை 11) தொடங்கி வைத்துள்ளார்கள்.

இந்தத் திட்டம் எவ்வளவு மகத்தானது என்பதை மக்களே சொல்லி இருக்கிறார்கள்...

« “என் பெயர் மாலதி. செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டில் வசிக்கிறேன். என் மகன் மாற்றுத்திறனாளி என்பதால் அவனைக் கவனித்துக் கொண்டு நான் வீட்டிலேயே இருக்கிறேன். வேலைக்குப் போக முடியவில்லை. எனவே ‘எனக்கு வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய கடன் வழங்க வேண்டும்’ என்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் மனு கொடுத்தேன். மனு கொடுத்த ஒரு மாதத்திலேயே எனக்கு வங்கியின்மூலம் 25 சதவீதம் மானியத்துடன் கடனுதவி தரப்பட்டது. இப்போது வீட்டில் இருந்தபடியே என்னுடைய மகனையும் பார்த்துக் கொண்டு துணிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறேன்”

« எனது பெயர் மீனா ஈஸ்வரி. நான் சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வருகிறேன். சிறு வயதிலேயே போலியோவால் என்னுடைய இடதுகால் செயலிழந்து விட்டது. இதனால் சிறு வயது முதல் எங்கு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் மிகவும் சிரமப்பட்டேன். வேறொருவர் உதவியை நாடவேண்டி இருந்தது. கடந்த மாதம் நடந்த ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமிற்குச் சென்று மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தேன். மனு அளித்து ஒரு மாத காலத்தில் எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் கிடைத்து விட்டது. தற்போது எங்கு செல்ல வேண்டும் என்றாலும் யாருடைய உதவியும் இல்லாமல் பெட்ரோல் ஸ்கூட்டர் மூலம் சென்று வருகிறேன்”.

« 3) எனது பெயர் ஸ்ரீலேகா. நான் பி.பார்ம் படித்துள்ளேன். எனக்குத் திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் பல ஆண்டுகளாக மருந்துக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். சொந்தமாக ஒரு கடை வைக்க நினைத்தேன். ஆனால் பணமில்லை. ‘மக்களுடன் முதல்வர்’ முகாமில் மருந்துக் கடை ஆரம்பிக்க கடனுதவி வழங்க வேண்டும் என்று மனு அளித்தேன். அடுத்த ஒரு மாதத்திற்குள் எனக்கு ரூ 5 இலட்சம், 25 சதவீதம் மானியத்துடன் கடனுதவி அளிக்கப்பட்டது. இப்போது நான் சொந்தமாக மருந்துக் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளேன். நான் படித்த படிப்பிற்கு ஏற்றாற் போல வேலை செய்து வருகிறேன்.

-– இவை அனைத்தும் மக்களின் மனங்களில் இருந்து வரும் வாக்குமூலங்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் கோரிக்கையையும் கேட்டுக் கேட்டு நிறைவேற்றித் தரும் மக்கள் முதலமைச்சராகச் செயல்படுகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

“தி.மு.க.வைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம்” என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லியது அவரது குரல் மட்டுமல்ல; மக்களின் குரலும் அதுதான்.

Also Read: ஆஸ்திரியாவா? ஆஸ்திரேலியாவா? - வெளிநாட்டுக்கு சென்று அந்த நாட்டின் பெயரை தவறாக சொன்ன மோடி... வீடியோ வைரல்!