Tamilnadu

கலைஞர் குறித்து அவதூறு : சீமான் மீது குண்டர் சட்டம் வேண்டும் - திமுக வழக்கறிஞர் அணி சார்பில் புகார்!

சென்னை வெப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். குறிப்பாக நேற்று எழும்பூர் ரயில் நிலையம் அருகே அழகு முத்துக்கோன் அவர்களின் 314 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் பல்வேறு கட்சி இயக்கங்களை சார்ந்தவர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வந்தது.

அப்போது நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து அவதூறாக பேசியுள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார்.

புகார் மனுவை அளித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் நடராஜ் பேசியது வருமாறு :

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பல தலைவர்களை குறித்து அவதூறாக பேசி வருகிறார். திருநெல்வேலியில் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரை பற்றி பல அவதூறான கருத்துகளை பேசியுள்ளார். மேலும் கடந்த 11 ஆம் தேதி அன்று விடுதலை போராட்ட வீரர் மாவீரர் அழகு முத்துகோன் அவர்களின் 314-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்திட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக மக்களால் போற்றப்படுகின்ற தமிழ்நாடு முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடல் உள்ளது. அந்த பாடலை நான் பாடுகிறேன் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் பார்க்கலாம் என்று கூறி "கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி, சண்டாளன் கருணாநிதி" என்று பாடலை பாடியுள்ளார்.

மேலும் சண்டாளன் என்ற வார்த்தை பிணங்களை அப்புறப்படுத்தும் தாழ்ந்த பிறவி என்ற அர்த்தத்தில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் ஒரு மனிதனின் பிறப்பை இழிவுபடுத்தவே இந்த சண்டாளன் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருளை நன்கு உணர்ந்த சீமான் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீது அவதூறு பரப்பி, இழிவு செய்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி அதன் மூலம் கலவரத்தை தூண்டவேண்டும் என்ற உட்கருத்தோடு பேசியுள்ளார்.

எனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட பட்டியலின சமூகத்தை சார்ந்த மக்களை குறிப்பிட்டு அவர்களை புண்படுத்தும் நோக்கில் பேசி வருகிறார். இதன் மூலம், மக்களின் உணர்வுகளை புண்படுத்தி அதன்மூலம் கலவரத்தை தூண்டி சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: 3 குற்றவியல் சட்டங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு : திமுக சட்டத்துறை சார்பில் கருத்தரங்கம் - எங்கு? எப்போது?