Tamilnadu

சென்னை பாம்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் : தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி !

சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் கோவில் தற்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இந்த கோயிலுக்கு வரும் ஜூலை 12ம் தேதி (நாளை) கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அறிவித்திருந்தது. இந்த சூழலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் இல்லை என்றும் தேவைபட்டால் மனு தாரர் தமிழ்நாடு அறநிலையத்துறையிடம் கோரிக்கை வைக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அந்த அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ருதிகேஸ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமானால், கோவிலில், கொடிமரம், கலசம், பலிபீடம் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்றும், பாம்பன் சுவாமி கோவிலில் இதுவரை எந்த கும்பாபிஷேகமும் நடத்தப்படவில்லை எனவும், தற்போது கும்பாபிஷேகம் நடத்தும் இந்து சமய அறநிலைய துறையின் செயல், அத்துமீறல் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த கோயிலை சீரமைத்து, தற்போது கும்பாபிஷேகத்துக்கு தயாராக உள்ளது என்றும், எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

பூஜைகள், விழாக்களை அறநிலையத் துறை நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பாம்பன் சுவாமி கோவிலில் அறநிலையத்துறை சார்பில் ரூ.1.12 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Also Read: ” 24 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றிய அதிமுக” : அமைச்சர் ஐ.பெரியசாமி சொல்வது என்ன?