Tamilnadu

“தமிழ்நாடு அரசால் நடராஜர் கோவில் கனக சபையில் பக்தர்கள் சாமி தரிசனம்” - அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு ஆதி சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில் மரத்தேர் திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "தமிழக முதல்வரின் ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்து சமய அறநிலைய துறையின் பொற்காலமாக திகழ்கிறது. 5000 திருக்கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருக்கால பூஜை கோயில்களில் 2 அரை லட்சம் வைப்பு நிதி ஏற்படுத்தபட்டுள்ளது. 17000 அர்சகர்களுக்கு மாதம் 1000 ஊக்க தொகை அளிக்கபட்டு வருகிறது, 140 கோடி செலவில் 350 அரசகர்களுக்கு குடியிருப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

108 பேர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளது. 97 கோயில்களுக்கு திருதேர் ஏற்பாட்டிற்கு 58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் நம்பிக்கை 970 கோடி நிதி வாங்கி உள்ளனர். 720 கோடி வாடகையாக வசூலிக்கபட்டுள்ளது.

ரூ.300 கோடி மன்னர் கால கோயில்களை பராமரிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1855 கோயில்களில் இன்றோடு சேர்த்து குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. நாளை மறுநாள் பாம்பன் சாமிகள் திருகோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதேபோல் 2025 க்குள் 5000 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

மெட்ரோ இரயில் பணிகளுக்காக இராயப்பேட்டையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் ராஜகோபுரத்தை இடிக்க வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது. இது தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை தயாராக உள்ளது.

மெட்ரோ இரயில் வளர்ச்சி பணிகளுக்காக சுரங்கப் பணி நடைபெறும் போது கட்டிடத்தின் நிலைத்தன்மையை ஆராய வேண்டிய சூழல் உள்ளது. அந்த அடிப்படையிலேயே ராஜகோபுரம் இடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் .

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அரசின் பல்வேறு நடவடிக்கையால் கனக சபையில் பக்தர்கள் ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய முடிகிறது. திருமஞ்சனம் பெயரைக் காட்டி பண்டிகை காலம் என கூறி கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது சட்ட நடவடிக்கைகளுக்கு பின் இன்று முதல் பக்தர்கள் மீண்டும் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்து வருகின்றனர்.” என்றார்.

Also Read: "சிபிஐ நடவடிக்கை என்பது அரசியல் சாசன விதிமீறல்"- மேற்கு வங்க அரசின் கருத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !