Tamilnadu

ரௌடி சீர்காழி சத்யா விவகாரம் : பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அலெக்ஸிஸ் சுதாகருக்கு பார் கவுன்சில் தடை !

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரௌடி சத்யா. சீர்காழி சத்யா (41) என்று அறியப்படும் இவர் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளது. பல நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த சீர்காழி சத்யா, கடந்த ஜூன் 28-ம் தேதி பல்லாவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு காரில் வந்துள்ளார்

அப்போது வட நெம்மேலி செக் போஸ்டில் போலீசார் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, காரில் வந்த சீர்காழி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் விசாரித்தனர். அவர் பதில்கள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த நிலையில், அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு அருகே பழவேழி பகுதியில் உள்ள மலையில் தனது கூட்டாளிகள் இருப்பதாக கூறியதன் அடிப்படையில் போலீசார் சீர்காழி சத்யாவை அழைத்துக் கொண்டு பழவேலி மலைக்கு வந்தனர். அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு சீர்காழி சத்யா தப்பியோட முயற்சித்துள்ளார்.

இதனால் போலீசார் சீர்காழி சத்யாவின் இடது காலில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காயமுற்ற அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். மேலும் சத்யாவின் தாக்குதலில் காயமடைந்த போலீசாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொலை, கொள்ளை என பல வழக்குகள் உள்ள சீர்காழி சத்யா, கடந்த 2021ஆம் ஆண்டு பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன் மற்றும் வினோஜ் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்த சூழலில் பாஜகவை சேர்ந்த ரௌடி சீர்காழி சத்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் சீர்காழி சத்யா உள்ளிட்ட 3 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாமல்லபுரத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்தியாவுக்கு, ஆயுதங்கள் வழங்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் மீதான வழக்கு முடிவுக்கு வரும் வரை வழக்கறிஞர் தொழில் புரிய தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, திருநெல்வேலி வழக்கறிஞர் சங்க தலைவர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜிம், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சரவணன் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சேதுபதி பாண்டியன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “Non Biological பிரதமரின் பதவிக்காலத்தில் ‘0’ மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து” - ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!