Tamilnadu

மறைந்த BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நேரில் ஆறுதல்!

திராவிட கழகத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய கிருஷ்ணன் என்பவரின் மகனும், தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக போராடிவந்த வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டு புதுப்பிப்பு வேலையை காண சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

பிறகு இரத்தக் காயத்துடன் இருந்த அவரை அங்கிருந்த நபர்கள் மீட்டு சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னை வடக்கு மண்டல கூதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில், 10 அதிதீவிர தனிப்படை அமைக்கப்பட்டு, ஆற்காடு பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ் மற்றும் அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் இறுதி மரியாதைக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும், அரசின் சார்பில் செய்து தரப்பட்டன.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்குச் சென்று, ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து, தனது ஆழ்ந்த அனுதாபத்தினையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

Also Read: நாடாளுமன்ற தேர்தல் 2024: தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மத்திய மாவட்டங்களுக்கான திமுகவின் அசத்தலான வாக்குறுதிகள்!