Tamilnadu

“இந்த நிலைதான் நாடாளுமன்றத்தில் உள்ளது” - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் !

சென்னை செம்மொழி பூங்காவில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த உணவு திருவிழாவை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், எம்.பி-யுமான கனிமொழி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது தான் மற்ற மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு குரல்கள் வர தொடங்கியுள்ளது. நீட் தேர்வு குறித்து மற்றவர்களும் உணர்ந்து கொண்டிருக்க கூடிய இந்த நேரத்தில், திமுக திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்றிருக்கும் நடிகர் விஜயின் கருத்தை நானும் வரவேற்கிறேன். நீட்டிலிருந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அத்தனை பேருக்கும் உள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒரு நாள் கூட பாஜக அரசால் சபையை நீட்டித்து நடத்த முடியவில்லை. அவர்கள் நினைத்திருந்தால், நிச்சயமாக நடத்தி இருக்க முடியும். ஆனால் அதற்கு இந்த ஒன்றிய பாஜக அரசு முன் வரவில்லை. மணிப்பூர் குறித்தும் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதாக எங்களுக்கு தெரியவில்லை.

நாடாளுமன்ற மரபுகளின்படி பிரதமர் உரையின் மீது கட்சி தலைவர் குறுக்கிட எழுந்து நின்றால், நிச்சயம் அவர்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யார் வேண்டுமானாலும் குறிக்கிடலாம். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யாருக்கும் குறிக்கிடுவதற்கான உரிமை இல்லை. இந்த நிலை தான் நாடாளுமன்றத்தில் உள்ளது." என்றார்.

Also Read: “இதுதான் மோடி ஆட்சியில் ஊழலை ஒழிக்கும் லட்சணம்” - செல்வப்பெருந்தகை கடும் தாக்கு!