Tamilnadu

தமிழ்நாட்டின் பால் வளத்தை உயர்த்த, படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

பால்வளத்துறையில் இந்தியா முன்னோடியாக விளங்கி வருவது குறித்தும், இதில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பங்கை விரிவுபடுத்த செய்யப்பட்டு வரும் முன்னெடுப்புகளையும், அதில் இளைஞர்களின் உள்ளீடு தேவை என்பதையும் உள்ளடக்கிய அறிக்கையை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அவ்வறிக்கையில், அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்ததாவது,

பால்வளத்துறை பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாய பெருங்குடி மக்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடிய துறையாக மட்டுமல்லாது, மக்களுக்கு சரிவிகித சத்தான பாலை உற்பத்தி செய்யும் உன்னதத் துறையாகவும் திகழ்கிறது.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் சேவைத்துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8% பங்களிப்பு தருகிற மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

உலகில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 25% பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்கு 4.47%. தமிழ்நாடு, நாட்டின் பதினொன்றாவது பெரிய பால் உற்பத்தியாளராகவும், ஆவின் 5-வது பெரிய பால் கூட்டுறவு உற்பத்தியாளராகவும் திகழ்கிறது.

தன்னிறைவடைந்து உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. பால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகப்பெரிய பங்காற்றுகிறது.

இந்தியப் பால்பண்ணைத் தொழில் தேசியப் பொருளாதாரத்திற்கு 5% பங்களிப்பதோடு, எட்டு கோடி விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கிறது.

2023-ல் 231 மில்லியன் டன்னாக இருக்கும் பால் உற்பத்தி, 2030ல் 300 மில்லியனாக உயர வாய்ப்புள்ளது. உலகளவில், பால் பொருட்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக மட்டுமல்லாமல் நுகர்வோராகவும் இந்தியா திகழ்கிறது.

ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை கருத்தில் கொண்டு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ள பால் பொருட்களுக்கு இந்தியாவில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தயிர், செறிவூட்டப்பட்ட பால் மற்றும் புரோபயாடிக் பானங்கள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது உலகின் மொத்த பால் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை இந்தியா வழங்குகிறது. மேலும் உற்பத்தியினை உயர்த்திட தரமான கால்நடை தீவனங்களை அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியினை அதிகரிக்க முடியும்.

சர்வதேச சந்தை வளர்ச்சியின் காரணமாக, உலகளாவிய பால்பொருட்களின் விநியோகத்தில் இடைவெளிகள் உள்ளது. அந்த இடைவெளியை இந்தியாவால் நிரப்ப முடியும் என்கிறார் சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பிரேஸல்.

ஐரோப்பா கண்டம் மற்றும் நியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு கால்நடையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவை அதிகரிப்பதன் வாயிலாக இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு உலக பால் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

கடந்த ஓராண்டில் பால்வளத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக சீர்திருத்தங்கள். பால் உற்பத்தியாளர்கள் வழங்கிய பாலுக்கான பணம் கடந்த காலங்களில் கால தாமதமாக வழங்கப்பட்டு வந்ததை முறைப்படுத்தி 10 நாட்களுக்கு ஒருமுறை பணப்பட்டுவாடா செய்ய வேண்டுமென்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இருந்த நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்கி தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை என்பது முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் போது பால் பகுப்பாய்வு கருவி மூலம் பாலில் இருக்கும் கொழுப்பு, கொழுப்பில்லாத திடப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கணக்கீடு செய்து தரத்திற்கேற்ற தொகை வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 4,172 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள சங்கங்களில் பகுப்பாய்வு கருவி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்திற்குரிய நியாயமான விலை கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 121 எண்ணிக்கை தொகுப்பு பால் குளிர்ரூட்டும் மையங்கள் கிராம சங்கங்களில் உருவாக்கப்பட்டு கூடுதலாக பால் குளிரூட்டும் திறன் 6 இலட்சம் லிட்டர் உயர்ந்து கிராமப்புற அளவிலான குளிரூட்டும் திறன் 22 இலட்சம் லிட்டரிலிருந்து 28 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஓராண்டில் (2023-24) கலைக்கப்படும் நிலையில் இருந்த 131 சங்கங்களை மீட்டெடுத்தும் 86 சங்கங்களை மறுமலர்ச்சி செய்தும் 289 புதிய சங்கங்களை தொடங்கியும் உள்ளோம்.

இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இச்சங்கங்களை நிலைத்த நீடித்த பொருளாதார தன்னிறைவு பெற்ற சங்கங்களாக மாற்ற வழிவகை செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆவின் பால் கொள்முதல் திறனை நாளொன்றுக்கு 70 இலட்சம் லிட்டராக உயர்த்தவும், கால்நடை எண்ணிக்கையைப் பெருக்க இந்த ஆண்டுக்குள் 2 இலட்சம் கால்நடைகள் வாங்க மானியம் மற்றும் கடன் வசதி வழங்க முடிவு செய்து கடந்த ஓராண்டில் புதிதாக கறவை மாடுகள் வாங்க 137 கோடி ரூபாய் கடன் வசதியும், கால்நடைப் பராமரிப்பு கடனாக 44,175 உறுப்பினர்களுக்கு 123 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 60,000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பால் விநியோகத்தை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக மனிதவளம் அதிகரித்தல், போக்குவரத்திற்கான ஏற்பாடுகள், வாகனம் செல்லும் வழித்தடங்களை

மாற்றியமைத்தல் என்று உரிய நேரத்தில் மக்களுக்கு பால் விநியோகத்தை கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தொகை (PF and ESI) பிடிப்புகள் போக நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒப்பந்த ஊழியர்கள் அவர்களுக்குரிய ஊதியத்தை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மின்சார சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஒரு பகுதியாக உச்ச செலவின (peak hours) நேரங்களில் மின்சார தேவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதம் ஒன்றிற்கு 48 லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் மூலம் ஊழியர்கள் வருகைப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் உபபொருட்களுக்கு நிலையான செயல் நடைமுறைகள் (SOP) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு சீரான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இணையம் மற்றும் ஒன்றிய ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாத ஓய்வூதியத் தொகை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி முறையில் இருந்த வேறுபாடுகள் களையப்பட்டு ஆவின் பணியாளர்களுக்கு ஒரே சீரான 42 சதவீதம் அகவிலைப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை 46 சதவீதமாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

கால்நடை தீவனம் தரம் உயர்த்தப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேற்கூறிய நடவடிக்கைகள் மூலம் தற்போது நாளொன்றிற்கு ஆவின் பால் கொள்முதல் 36 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

இதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 70 இலட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள். தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு மாவட்ட கூட்டுறவு பால் சங்கங்களில் புதிய ஆய்வகங்கள் நிறுவப்படும்.

உற்பத்தியாளர்களிடமிருந்து தரமான பாலைக் கொள்முதல் செய்வதற்கும் மற்றும் பணம் செலுத்துவதற்கான உடனடி ஒப்புகை சீட்டு வழங்குவதற்கும், 500 தானியங்கி பால் சேகரிப்பு அமைப்பு நிறுவப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 1 கோடி செலவில் தீவன புல் வழங்கப்படும்.

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான், அத்தகைய விவசாயத்தை பாதுகாப்பதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கிலும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வரும் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் படி பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டு ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

உலக சந்தை பால் உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக கொண்டு செல்ல படித்த இளைஞர்கள், பெண்கள், தொழில் முனைவோர்கள் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு முன் வருவோர்க்கு பால்வளத்துறை உறுதுணையாக செயல்படும். பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் மானியங்களை ஒருங்கிணைத்து குறிப்பாக தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 30% அல்லது (ரூ.2,25,000) இதில் எது குறைவோ மானியமாக வழங்கப்படும்.

மேலும், பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது (ரூ.3,75,000) இதில் எது குறைவோ மானியமாக வழங்கப்படும். TAMCO திட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்காக கடன் திட்டங்கள் குறைந்த வட்டியில் (6%) வழங்கப்படுகிறது. TABCEDCO திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு குறைந்த வட்டியில் (6%) வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது.

DIC மூலம் படித்த இளைஞர்களுக்கு 15% முதல் 35% வரை திட்ட மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், காப்பீடு, மருத்துவ உதவிகள், பண்ணை அமைக்க தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவை வழங்கப்படும். இதன் மூலம் குறைந்தது 10,000 புதிய கால்நடை வளர்ப்போரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

Also Read: இடைத்தேர்தல் - ”சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்ளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!