Tamilnadu
திருச்சி TO டெல்லி... ஒன்றிய அமைச்சரிடம் விமான சேவை கோரிக்கை வைத்த தமிழ்நாடு எம்.பி-க்கள் !
திருச்சியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேரடி விமானம் இயக்கக் கோரி ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவிடம் தமிழ்நாடு எம்.பி-க்கள் எம்.எம்.அப்துல்லா, ஜோதிமணி, அருண் நேரு, துரை வைகோ, முரசொலி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து மதிமுக எம்.பி துரை வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு:
"ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களை இன்று (01.07.2024), பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் கே.என்.அருண் நேரு, மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் எம்.எம்.அப்துல்லா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் முரசொலி ஆகியோருடன் நானும் இணைந்து சென்று, நேரில் சந்தித்து திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.
அமைச்சர் அவர்களிடம் நாங்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில்,
"திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டிடத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வந்தது. கூடுதல் பயணிகளின் வருகைக்காகவே இந்தப் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதி இல்லை. ஆகவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தோம்.
இரண்டாவதாக, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன.
இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிமாக உள்ளது. ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூர், சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவையை பயன்படுத்துகின்றன. இதனால், திருச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய வருவாய் பெங்களூர், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்குச் சென்று விடுகின்றன.
எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும் என, கோரிக்கை வைத்தோம்.
அதேப்போல, திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இல்லை. ஆகவே, டெல்லியில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கொச்சினுக்கும் விமானங்களை இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம்.
இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்ட மக்களுக்கும் பெரும் பயன் விளைவிப்பதாக இருக்கும்.
ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களின் தந்தை காலஞ்சென்ற கிஞ்சராபு எர்ரான் நாயுடு அவர்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார். அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்கள், தலைவர் வைகோ அவர்களின் உடல் நலத்தை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்ததோடு, தலைவர் அவர்கள் டெல்லிக்கு வரும்போது நேரில் வந்து சந்திக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்."
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!