Tamilnadu

ரூ.100 கோடி நில மோசடி : அதிமுக முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு !

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலதிபரான இவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடந்த 14-ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில், ”நான் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துறை அமைச்சராக இருந்து போது, அரசு ஒப்பந்த பணிகளுக்காக எனது கடையில் இருந்து எலக்ட்ரிக் பொருட்களை அதிக அளவுக்கு வாங்கி வந்தார். இதனால் அவருடன் நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து வெள்ளியணையில் தனக்கு சொந்தமாக உள்ள ரூ.100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை, விஜயபாஸ்கர் தனக்கு எழுதி கொடுக்கும் படி கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். பின்னர் அந்த 22 ஏக்கர் நிலத்தை எனது மகளுக்கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்து விட்டேன். ஆனால் அசல் பத்திரங்கள் என்னிடம் தான் உள்ளது.

இந்நிலையில், அந்த செட்டில்மெண்ட் பத்திரம் தொலைந்து விட்டதாக காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்து, அதை கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ் பெற்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேறு நபர்களுக்கு அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதுபற்றி அறிந்து நான் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் முறையிட்டேன். அப்போது அவர் நிலத்தை எழுதி கொடுக்கும் படி மிரட்டினார். பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், அதிமுக வழக்கறிஞர் சங்க தலைவர் மாரப்பன் உள்ளிட்ட சிலர் என்னை கடத்தி சென்று அடித்து துன்புறுத்தினர். எனவே எனக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இருந்து போலிஸார் மீட்டு தரவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் நில உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read: திருச்சி TO டெல்லி... ஒன்றிய அமைச்சரிடம் விமான சேவை கோரிக்கை வைத்த தமிழ்நாடு எம்.பி-க்கள் !