Tamilnadu
நீட் தேர்வு : 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
நீட் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டமன்றங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசினை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்குறிப்பிட்ட மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
மருத்துவக் கல்வியின் எதிர்காலம் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாழ்நாள் விருப்பங்கள் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சனை குறித்து டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வரவே தாம் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும், நீட் தேர்வின்போது நடந்த முறைகேடுகள் குறித்த சமீபத்திய பல்வேறு செய்திகள் தேசிய தேர்வு முகமையின் (NTA) பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு, நீட் தேர்வை எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளையும் சிதறடித்துள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீட் தேர்வை அதன் தொடக்கத்திலிருந்தே நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள் என்றும், அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை மேல்நிலைத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் செய்யப்படவேண்டும் என்றும் தனி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் நீட் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான மிக அதிகமான பயிற்சிக் கட்டணங்களை செலவிட முடியாத கிராமப்புற மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மருத்துவக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலேயே நாங்கள் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வழங்கக் கோரியும் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்வுகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் நீட் முறையைக் கைவிடும் வகையில், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என்று தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே, இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தையும், தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த உங்கள் மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும் தமது கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!