Tamilnadu

“வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழ்நாடு” - பேரவையில் பட்டியலிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் !

2024 -2025  ஆம் ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்  துறை மானியக் கோரிக்கையின் மீது அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆற்றிய உரை :

2024 -2025  ஆம் ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்  துறை மானியக் கோரிக்கையில், உரையாற்றுவதற்கு   வாய்ப்பு வழங்கிய நாங்கள் உயிராக போற்றும்  கழகத் தலைவர்  தமிழக முதல்வர்  அவர்களுக்கும், பேரவைத் தலைவர்  அவர்களுக்கும்,  எனது  நன்றியை தெரிவித்து  உரையை தொடங்குகிறேன்.

நம்மை விட்டு மறைந்தாலும், நம்முடைய இதயங்களில்,  இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று,  இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய  பல்வேறு திட்டங்களை  கொண்டு வந்து, அதை செயல்படுத்தி  தமிழகத்தின் ஏழை -எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறு உருவாய் உள்ள முதலமைச்சர் அவர்களின்  ஓயாத உழைப்பாலும்,  சீரிய திட்டங்களாலும்,  சிறந்த நிர்வாகத் திறனாலும்,  தொழில் துறையில்  இந்திய அளவில் தமிழ்நாடு  உள்நாட்டு உற்பத்தியில் 9.07 சதவீதம் பங்களித்து 2 ஆம் இடத்திலும், ஏற்றுமதியில் 9.5 சதவீதம் பங்களித்து 3 ஆம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் 26 லட்சத்து 61 ஆயிரம்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு  சுமார் 2 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்திய அளவில் 2 ஆம் இடத்தில் உள்ளது.   இந்த சாதனைகளுக்கு எல்லாம்  அடித்தளமாக விளங்குவது “ திராவிட மாடல் ஆட்சி ” என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் சமத்துவம்,  சமூக நீதி, சமச்சீர் வளர்ச்சி ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு  ஆட்சி பொறுப்பேற்ற  3 ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்,  குறுங் குழும மேம்பாட்டு திட்டம்,  பெருங்குழும மேம்பாட்டு திட்டம்,  தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம்,  தமிழ்நாடு வர்த்தக வரவு தள்ளுபடி தளம்,  அடுக்குமாடி தொழில் வளாகம்,  பணியாளர் தங்கும் விடுதி,  தமிழ்நாடு SC-ST புத்தொழில் ஆதார நிதி,  வட்டார புத்தொழில் மையங்கள்,  தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு  நிறுவனம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் என பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி  இந்த துறையை மிகப் பெரிய வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் என்பதை  பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் தொழில் தொடங்க  வழி வகை செய்து  வாய்ப்பு அளிப்பதில் சமத்துவத்தையும், பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர்,  சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் என எல்லோரையும் உள்ளடக்கி உயர்த்துவதில்   சமூக நீதியையும்,

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு  கூடுதல் நிதி ஒதுக்கி புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சமச்சீர் வளர்ச்சியையும் ஏற்படுத்தி சாதனை படைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து  கொண்டு,  கடந்த 3 ஆண்டுகளில்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை படைத்த   சாதனைகளையும்  நடப்பு நிதி ஆண்டில் நிறைவேற்ற உள்ள திட்டங்களையும், பேரவைத் தலைவர் வாயிலாக  இந்த மன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்வர் அவர்களால் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய  பட்டியலின மற்றும் பழங்குடியின  இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்கி அவர்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்  என்ற நல்ல நோக்கில்  கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டம் தான் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட  முதல் ஆண்டிலேயே  ரூ. 159 கோடியே 40 லட்சம் மானியத்துடன் ரூ. 302 கோடியே 86 லட்சம்   வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1,389 பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

MSME துறையில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்கள்  செயல்படுத்தப்படுகிறது. NEEDS, UYEGP, PMEGP, PM-FME, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) ஆகிய திட்டங்களின் கீழ்  கழக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில், ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் ரூ. 2,615 கோடியே 30 லட்சம் வங்கி கடனுதவி வழங்கி 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 3 லட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில்   55 ஆயிரத்து 230 தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்ட நிலையில், கழக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டு காலத்தில் 30 ஆயிரத்து 376 தொழில் முனைவோர்களை உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

கழக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகாலத்தில், MSME தொழில்களுக்கு வழங்கப்படும்    மானியத் திட்டத்தின் கீழ்,  முதலீட்டு மானியம், மின் மானியம், வட்டி மானியம் என 10 வகையான மானியங்கள் 15 ஆயிரத்து 22 நிறுவனங்களுக்கு ரூ. 1,003 கோடியே 59 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 3 ஆண்டுகளில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ரூ. 285 கோடியே 42 லட்சம் மானியத்துடன் ரூ. 784 கோடியே 97 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 12 ஆயிரத்து 10 புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்

கடந்த 3 ஆண்டுகளில்  புதிதாக உருவாக்கப்பட்ட  30 ஆயிரத்து 376 தொழில்முனைவோர்களில், 20 ஆயிரத்து 979 தொழில்முனைவோர்கள்  5,098 பெண்கள்,  13,473 பட்டியலினத்தவர்/   பழங்குடியினர்,  2,408 சிறுபான்மையினர் / மாற்றுத்திறனாளிகள்  புதிய தொழில்முனைவோர்களாக  உருவாக்கப்பட்டு,  பொருளா தாரத்திலும்,  சமத்துவ,  சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக கழக அரசு விளங்குகிறது.

MSME தொழில்களின் வளர்ச்சிக்காக முதல்வர் அவர்களால்,
கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 295 கோடி மதிப்பீட்டில், 512 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது..  248 ஏக்கர் பரப்பளவில் ரூ 115 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில்,  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், சேலம்,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 8 புதிய தொழிற்பேட்டைகள்    அமைக்கும் பணி தற்போது  நடைபெற்று வருகிறது. 

குறுந்தொழில்கள் தொடங்கிட  நகர்புரங்களில் போதிய இடவசதி இல்லாததால்,  அவர்கள் உடனடியாக தொழில் தொடங்கிட  அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டும்  திட்டத்தின் கீழ் சென்னையில், கிண்டி மற்றும் அம்பத்தூர்    தொழிற்பேட்டைகளில், ரூ.158 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் 264 தொழில் கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் எங்கள் இளைய தலைவர்  விளையாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால்  கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம்,  அரிய கவுண்டம்பட்டியில்  ரூ. 24 கோடியே 55 லட்சம் மதிப்பில்  கொலுசு உற்பத்தியாளர்களுக்காக      கட்டப்படும் அடுக்குமாடி தொழில் வளாகம் விரைவில் முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.  கிருஷ்ணகிரி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில்  4 இடங்களில்,  ரூ.183 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில் கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

MSME தொழில் நிறுவனங்களில்  வெளியூரில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள்  குறைந்த வாடகையில் தங்குவதற்காக, சென்னை – அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ. 29 கோடியே 47 லட்சம் மதிப்பில் 800 தொழிலாளர்கள் தங்கும் வகையில்  கட்டப்பட்ட தொழிலாளர் தங்கும் விடுதி கடந்த பிப்ரவரி மாதம் திறந்து   வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் – குறிச்சி தொழிற்பேட்டையில்  ரூ. 22 கோடி மதிப்பீடில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி  ஒரிரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படும். 

ஒரு MSME நிறுவனம்  தனது தேவைக்கு அதிக விலை கொண்ட நவீன இயந்திரங்கள் மற்றும்  சோதனை கருவிகள் வாங்க இயலாத   காரணத்தால், தமிழ்நாடு சிட்கோ MSME நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக அவர்கள் கூட்டாக பயன்படுத்திக் கொள்ளும்  வகையில், 49 பொது வசதி மையங்களுக்கு    ஒப்புதல் பெற்று 32 பொது வசதி மையங்கள் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.  இத்திட்டத்தை செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 

உலக அளவிற்கு  தமிழ்நாடு Start Up நிறுவனங்களை    உயர்த்திட,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் Start Up -TN இயக்கத்திற்கு   தனி முக்கியத்துவம் அளித்து அதற்கென  முதன்மை செயல் அலுவலர்  CEO  பதவியை உருவாக்கி, அவரது தலைமையில், 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து  Start Up-TN இயக்கத்திற்கு  புத்துயிர் ஊட்டியுள்ளார்.

முதல்வர் அவர்கள் Start Up நிறுவனங்களின் வளர்ச்சிக்கு  தகுந்த சூழலை உருவாக்கியதால்,  தமிழ்நாட்டில் 2021 -மார்ச் வரை சுமார் 2,300 Start up நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த  நிலையில்,   தற்போது இந்த எண்ணிக்கை 8,500 க்கும் மேல் உயர்ந்துள்ளது  என மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன். 

 கடந்த அதிமுக ஆட்சியில் Start up தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் கடைசி தரவரிசையில் இருந்த தமிழ்நாடு   கழக அரசு பொறுப்பேற்ற பின் 2021-ல்  3-ஆம் இடத்திற்கு முன்னேறி   லீடர் விருதினை பெற்றது.  தற்போது, ஒன்றிய அரசு வெளியிட்ட  2022 - ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில்   Start up தமிழ்நாடு நிறுவனம் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து  சிறந்த செயற்பாட்டாளர் என்ற  விருதினை பெற்றுள்ளது.

கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் Start-Up நிறுவனங்களை உருவாக்க, ஆதார நிதி வழங்கும் (TANSEED)  திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  இத்திட்டத்திற்கு முதல்வர் அவர்களால் 2021-2022, 2022-2023 ஆம் ஆண்டுகளில் 150 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 15 கோடி நிதியும்,  ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள்  Start-Up நிறுவனங்களை தொடங்கிடரூ. 80 கோடி சிறப்பு நிதியும் ஒதுக்கீடு    செய்தார்கள்.  இந்த திட்டங்களின் கீழ் இதுவரை, 170 Start-Up நிறுவனங்களுக்கு,  ரூ. 69 கோடியே 15 லட்சம் அரசு நிதியுதவி வழங்கியுள்ளது என பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உலகளவில் முன்னெடுத்து செல்ல,  2025 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் உலக புத்தொழில் மாநாடு நடத்தப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் மூலம் இந்தியாவிலேயே முதன் முதலாக, பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தொழில்முனைவு மற்றும்  புத்தாக்க சிந்தனையை உருவாக்க முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4,483 பள்ளிகளில் உள்ள  12 லட்சத்து 45 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கும்,  கல்லூரியில் பயிலும்6 லட்சத்து 40 ஆயிரம்  மாணவ, மாணவியர்களுக்கும்   தொழில் முனைவு மற்றும்  புத்தாக்க ஊக்குவிப்பு பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் மற்றும்  இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திட புத்தாக்க பற்றுசீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 326 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ. 8 கோடியே 44 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே முதல் முறையாக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் இதுவரை38 ஆயிரத்து 270 தொழில் முனைவோர்களின்,  ரூ. 5 ஆயிரத்து 715 கோடி வங்கி கடனுக்கு, மாநில அரசின் கடன் உத்தரவாதமாக ரூ. 563 கோடியே 12 லட்சம் அரசு வழங்கியுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரு நிறுவனங்களுக்கு குறு, சிறு நிறுவனங்கள் செய்து கொடுக்கும் பொருட்களுக்கான விலைபட்டியல்களை வங்கிகளில் வைத்து விரைவாக கடன் பெற   செயல்படுத்தப்படும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் - Tamil Nadu-TReDS திட்டத்தின் கீழ்,  1,491 MSME நிறுவனங்களுக்கு  ரூ. 2 ஆயிரத்து 139 கோடி மதிப்பில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

MSME நிறுவனங்கள், வழங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை பெருநிறுவனங்கள் வழங்காத பட்சத்தில், அவற்றை சட்டப்பூர்வமாக பெற்றுத்தர சென்னை,  கோயம்புத்தூர்,  திருச்சி, மதுரை  ஆகிய  4 மண்டலங்களில் வசதியாக்கல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கழக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இம்மன்றங்கள் மூலம் 2,008 MSME நிறுவனங்களுக்கு ரூ. 374 கோடியே 76 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

MSME நிறுவனங்களுக்கு தேவையான  நிதி வசதி,  சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதிக்கு உதவுதல் உள்ளிட்ட சேவைகளை  FaME-TN அளித்து வருகிறது.  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட   வாங்குபவர் - விற்பனையாளர் சந்திப்பில் 174 MSME நிறுவனங்களிடமிருந்து  ரூ. 42 கோடியே 30 லட்சம் அளவிற்கு கொள்முதல் ஆணைகள்  முடிவு செய்யப்பட்டன.  தொழிற் கண்காட்சி நடத்த  11 சங்கங்களுக்கு  ரூ.1 கோடியே 91 லட்சமும், பல்வேறு கண்காட்சியில் பங்கு பெற  58 MSME நிறுவனங்களுக்கு  ரூ.69 லட்சத்து 76 ஆயிரம் நிதியுதவி    அளித்துள்ளது. 

தமிழ்நாட்டின் MSME தொழில் நிறுவனங்களின்  உற்பத்தி தரத்தினை உலக அளவில் உயர்த்திடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் - திருமுடிவாக்கத்தில் ரூ.47 கோடியே 62 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும்  துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தின் மூலம்  
MSME நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், தொழில்நுட்ப கருவிகளை பரிசோதிக்கும் பொது வசதி மையமாக  உயர்தொழில்நுட்ப பரிசோதனை கூடம்,  விரைவில் முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தேங்காய் நாரிலிருந்து உற்பத்தி செய்யப்படும்  கயிறு, பித்,  மதிப்பு கூட்டப்பட்ட கயிறு பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு  உள்ளதை உணர்ந்த

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,  தென்னை நார் தொழிலை ஊக்குவிக்கவும் சந்தை வாய்ப்பை உலக அளவில்  விரிவுப்படுத்தவும்,  கோயம்புத்தூரில்,  ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (TAN-COIR) தொடங்கி வைத்து, தென்னை நார் தொழில் கொள்கை Coir Policy வெளியிட்டார்கள்.  மேலும், கோவையில், ரூ.4 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான பரிசோதனை கூடம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில்,பேராவூரணி,  பொள்ளாச்சி, K-பரமத்தி, குண்டடம்,   உடுமலைபேட்டை, விருதுநகர்    ஆகிய 6 இடங்களில் ரூ.38 கோடியே 10 லட்சம் மானியத்துடன்  ரூ.51 கோடியே 8 லட்சம் மதிப்பில், கயிறு குழுமங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.. இதற்காக, இதுவரை  ரூ. 9 கோடியே 23 லட்சம்  அரசு மானியமாக வழங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனமான- டான்சி நிறுவனத்தின் கீழ்  20 உற்பத்தி நிலையங்களும், 2 காட்சியத்துடன் கூடிய விற்பனை நிலையமும் இயங்கி வருகிறது. இதுவரை எந்த காலத்திலும்  இல்லாத வகையில், டான்சி நிறுவனம்   2022-2023 ஆம் ஆண்டு ரூ.138 கோடி மதிப்பிலும்,  2023-2024 ஆண்டு ரூ.118 கோடி மதிப்பிலும், பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்து வருகிறது. கழக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் ரூ.317 கோடியே 68 லட்சத்திற்கு  பொருட்களை உற்பத்தி செய்து,  ரூ.325 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளது. 

கிராமப்புர தொழிலாளார்களுக்கு தொடர் வேலைவாய்ப்பை வழங்கி,   அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்திட   தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள்,  இண்ட்கோசர்வ், சேகோசர்வ் ஆகியவை  செயல்பட்டு வருகின்றன. தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படும் 269 சங்கங்களில் 70 ஆயிரத்து 37 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் இந்த தொழிற்கூட்டுறவு சங்கங்கள்,  கடந்த நிதியாண்டில்,  ரூ.1308 கோடியே 10 இலட்சம் அளவிற்கு   விற்பனை செய்து,  ரூ. 50 கோடியே 15 இலட்சம் இலாபம்   ஈட்டியுள்ளன  என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு   சங்கமானது  பாம்பு பிடிப்போர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பு வழங்குவதை  நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.  விஷ முறிவு மருந்து தயாரிக்க  சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும் பாம்புகளிடமிருந்து எடுக்கப்படும் நஞ்சு பயன்படுத்தப்படுகிறது. இந்த சங்கம் கடந்த 3 ஆண்டுகளில்  ஆயிரத்து 807 கிராம் நஞ்சினை   ரூ. 5 கோடியே 43 லட்சத்திற்கு விற்று, ரூ. 2 கோடியே 37 லட்சம் லாபம் ஈட்டி   உள்ளது.

தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்காக தொடங்கப்பட்ட இண்ட்கோசர்வ் நிறுவனம் கடந்த ஆண்டு, 11 ஆயிரத்து 300 மெட்ரிக் டன்  தேயிலை உற்பத்தி செய்து,  தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 57 கோடியே 88 லட்சம்    வழங்கியுள்ளது.  மேலும், நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 68 கோடியே 60 லட்சம் செலவில்   15 தொழிற்சாலைகள் நவீனப்படுத்தும்    பணிகள் மேற்கொள்ளப்பட்டு  7 தொழிற்சாலைகள் பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 தொழிற்சாலைகளில்  இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு  கொண்டு வரப்படும். 

தேயிலை வாரியம் நிர்ணயம் செய்யும் பசுந்தேயிலை விலைக்கு ஈடான விலையை  சிறு தேயிலை விவசாயிகள் பெற்றிட பசுந்தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ. 2 வீதம், ஆதார விலையினை மானியமாக அரசு வழங்குகிறது.  இதற்காக 2022 - 2023 ஆம் ஆண்டிற்கு ரூ. 5 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலையில்,   2023 - 2024 ஆம் ஆண்டிற்குரூ. 8 கோடியே 51 லட்சம்  இந்த நிதி ஆண்டில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  விரைவில் வழங்கப்பட உள்ளது.  இதன் மூலம், சுமார்  27,000 தேயிலை விவசாயிகள் பயன் பெறுவர். 

மரவள்ளி கிழங்கு பயிரிடும் விவசாயிகள்  ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைத்திட தொடங்கப்பட்ட சேகோசர்வ் கூட்டுறவு சங்கம்,  கழக அரசில் ஆண்டுதோறும் வர்த்தகம்  அதிகரித்து கடந்த ஆண்டு  ரூ. 1,741 கோடியே 47 லட்சம் விற்பனை   செய்து,  ரூ. 11 கோடிய 12 லட்சம் லாபம் ஈட்டி உள்ளது.  

MSME நிறுவனங்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் தாய்கோ வங்கி,  கடந்த ஆண்டில் ரூ.1,056 கோடியே 24 லட்சம் வைப்பு நிதி திரட்டி ரூ. 12 கோடியே 76 லட்சம்  லாபம் ஈட்டியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலுடன்,MSME துறையில், இந்திய அளவில் தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வர  தொடர்ந்து செயல்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: “தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி” - பேரவையில் அமைச்சர் PTR-ன் அறிவிப்புகள் என்ன?