Tamilnadu

“சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கைகோர்த்து இருக்கிறீர்கள்” - பாமகவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி !

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக பா.ம.க. உறுப்பினர் ஜி.கே. மணி பேசியதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பதிலளித்தார்

அதன் விவரம் :


21 பேருக்கு மணிமண்டபம் அமைக்கின்றவர் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.  அப்போது இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.  எல்லாவற்றையும் செய்தவர்கள் தலைவர் கலைஞர் அவர்களும், இன்றைய திராவிட மாடல் முதலமைச்சர் அவர்களும்தான்.  இன்னும் சொல்லப்போனால், அந்த 20 சதவிகித இருக்கின்ற காரணத்தால்தான், வட மாவட்டங்களில் இன்றைக்கு 10.5 சதவீதம் என்று நீங்கள் கேட்கின்ற சதவீதத்தைவிட கூடுதலாக வன்னியர் சமூகத்து மக்கள் தங்களுக்கான உரிமையைப் பெறுகிறார்கள்.  அத்தனை புள்ளிவிவரங்களும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.  இன்னும் சொல்லப்போனால், TNPSC வரைக்கும் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டதிலே, 10.5 சதவீதத்தைத் தாண்டிதான் வன்னியர்கள் இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு இருக்கின்ற காரணத்தால் பெறுகிறார்கள்.  நீங்கள் கேட்பது, அதனைக் குறைத்து கொடுப்பதற்காக வழியைத்தான் வகுத்துக் கொடுக்கும். 

இது வன்னியர் சமூகத்திலிருக்கின்ற படித்த, மூத்த, பல நிபுணர்கள் உங்களுக்கு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள்.  ஆனால், நீங்கள் புலி வாலை பிடித்து விட்டீர்கள்.  அந்த புலி வாலை பிடித்துக்கொண்டே போகிறீர்கள்.  புலியும் உங்களை விடாது.  வாலையும் நீங்கள் விடமுடியாது.  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் உங்களுக்கு தெளிவாக பதில் சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் நீங்கள் சொல்வது திராவிட முன்னேற்றக் கழகம் இதற்கு எதிராக இருப்பது போல காட்டுவதற்காக என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் வன்னியர் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தே மாண்புமிகு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தபோதுதான் அந்த 20 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. 20 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்த தலைவர் கலைஞர் அவர்களை அந்த சமூகத்திற்கு எதிரானவர் போல் சித்தரிப்பதையே பா.ம.க. தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் இந்த இடஒதுக்கீடு போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது காக்கைக் குருவிபோல் சுட்டுக் கொன்றது யார் என்பதை மறந்துவிட்டு அவர்களோடு கூட்டணி அமைத்தீர்கள். இப்போது கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நாள் அறிவிக்கின்ற அன்று உங்களுக்குள் பேசிக்கொண்டு அந்த 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவிக்கை செய்து நீங்கள் உங்கள் கூட்டணியை அறிவித்தீர்கள். அந்த 10.5 சதவிகிதம் அரைவேக்காட்டுத்தனமாக அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டது என்பது உங்களுக்கும் தெரியும். அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நிராகரிக்கப்பட்ட பிறகும் நீங்கள் அவர்கள் செய்ததுபோல சொல்லித்தான் நீங்கள் தேர்தலை சந்தித்தீர்கள். ஆனால், 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிரியாகக் காட்டினீர்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலே 10.5 சதவிகிதம் கொடுத்த அஇஅதிமுகவையும் கைவிட்டுவிட்டீர்கள். எது சமூக நீதிக்கு எதிராக இருக்கிறதோ அந்த பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்து இருக்கிறீர்கள். சமூக நீதியை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்ற பா.ஜ.க.-வை இன்றைக்கும் தமிழகத்தில் தூக்கிப் பிடிக்கிறவர்கள் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள். எப்படி ஒரே நேரத்தில் இத்தனை விதமாக பேச முடிகிறது என்பது விந்தையாக இருக்கிறது.

இப்போது நடைபெறப் போகிற இடைத் தேர்தல் நேரத்தில் அங்கு இருக்கிற மக்களுக்கு நீங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்வதாக நினைத்துக் கொண்டு சட்டமன்றத்தில் பதிவு செய்வது என்பது ஒரு தவறான முன்னுதாரணம். இன்னும் சொல்லப்போனால், பீகாரிலே உள்ஒதுக்கீடுதான் வழங்கப்படுகிறது. அதுதான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இங்கே பேசும்போது மேம்போக்காக சொல்கிறீர்கள், மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது, அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று. அத்தனை உள்ஒதுக்கீட்டையும் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்பதை நீங்கள் மறக்கக் கூடாது. (மேசையைத் தட்டும் ஒலி) பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இல்லாது இருந்த கொங்கு வேளாள கவுண்டரை பிற்படுத்தப்பட்டவர்களாக சேர்த்தவரும் கலைஞர் அவர்கள்தான்; மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி  அதிலே வன்னியர்களை சேர்த்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்; இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்; அருந்ததியினர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

இன்றைக்கும் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் எத்தனை முறை அமைச்சர்களை அழைத்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை அழைத்து, இன்னும் சொல்லப்போனால், உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்களையும் அழைத்து, இந்த இடஒதுக்கீடு குறித்து ஆலோசனை செய்திருக்கிறார் என்பதை நீங்களும் அறிவீர்கள், உங்கள் கட்சித் தலைவரும் அறிவார். ஆனாலும் அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு மீண்டும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தை குற்றஞ்சாட்டுவதைப் போல, பழியையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது சுமத்துவதுபோல் பேசுவது என்பது அவைக்கு அழகல்ல.  உங்கள் அரசியல் அனுபவத்திற்கு அழகல்ல.   

Also Read: பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீண்டும் பதவி வகிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் பொன்முடி !