Tamilnadu

“அந்த உணர்வைச் சொல்லவில்லை என்றால், நன்றி மறந்தவனாகிவிடுவேன்” : திருமண விழாவில் முதலமைச்சர் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.06.2024) சென்னை, ஆயிரம் விளக்கு கிழக்குப் பகுதிக் கழகச் செயலாளர் மா.பா. அன்புதுரை அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

இந்த சிறப்பான மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் நான் முதலில் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தம்பி உதயநிதி பேசியதுபோல், இது எங்கள் குடும்பத் திருமணம். அதனால்தான் குடும்பத்தோடு வந்திருக்கிறோம்.

அன்புதுரையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவர் சாதாரண ஒரு மன்றத்தின் செயலாளராக இருந்து, அதற்குப் பிறகு இளைஞர் அணியில் பொறுப்பேற்று, வட்டச் செயலாளாராக, பின்னர் பகுதிச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இன்னும் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், சூழ்நிலையின் காரணமாக வரமுடியாத ஒரு நிலை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டது இல்லை. தலைவர் என்ன சொல்கிறாரோ, அதுதான் வேதவாக்கு.

அன்புதுரையைப் பொறுத்தவரையில், நான் 1984-ஆம் ஆண்டு முதன்முதலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்ட நேரத்தில் எனக்காகப் பணியாற்றியவர். வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்ட விதம் இன்னும் என்னால் மறக்க முடியாது.

ஒவ்வொரு தெருவாக அழைத்துச் செல்வார். அண்ணா அறிவாலயத்திற்கு அருகில் இருக்கும் இளங்கோ சாலையாக இருந்தாலும் சரி, அதையொட்டி இருக்கும் எல்லையம்மன் காலனியாக இருந்தாலும் சரி, வீனஸ் காலனியாக இருந்தாலும் சரி, போயஸ் கார்டனாக இருந்தாலும் சரி, எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்று, என்னை அறிமுகப்படுத்தினார்.

காரணம் அவர் ஏற்கனவே எல்லோரிடத்திலும் அறிமுகம் ஆனவர். எல்லோருடைய பெயரையும் சொல்லி, அந்தத் தொகுதியில் இருக்கும் எல்லோரையும் அழைக்கக்கூடியவர் நம்முடைய அன்புதுரை. மதியம் நேரம் ஆகிவிட்டது, வெயில் வந்துவிட்டது, போதும் என்றால்கூட இன்னும் இரண்டு வீடுதான், இன்னும் இரண்டு வீடுதான் என்று சொல்லி, அழைத்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பார்.

அந்த அளவிற்குத் தேர்தல் பணியாக இருந்தாலும், கட்சிப் பணியாக இருந்தாலும் அவரிடத்தில் ஒன்று சொல்லிவிட்டால், முடியாது என்று சொல்லமாட்டார். கஷ்டம் என்றுகூட கூறமாட்டார். நீங்கள் சொல்லிவிட்டீர்கள், நான் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு அதை வெற்றியோடு முடித்துத் தரும் ஆற்றலைப் பெற்றவர் நம்முடைய அன்புதுரை.

அன்புதுரையின் இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நியாயமாக, நான் நீண்ட நேரம் இந்த விழாவில் கலந்து கொண்டு உங்களோடு இருந்திட வேண்டும். ஆனால், சட்டமன்றம் முன்கூட்டியே காலை 9.30 மணியளவில் தொடங்கவிருக்கிறது. அதனால், நான் நீண்ட நேரம் நின்று உங்களுடன் பங்கேற்க முடியாததற்காக உள்ளபடியே நான் வருத்தப்படுகிறேன்.

நான் வரும்போதுகூட ஒரு கண்டிஷன் போட்டுவிட்டுத்தான் வந்தேன். வந்து மாங்கல்யம் எடுத்துக் கொடுத்துவிட்டு நான் போய்விடுவேன். அதற்குப்பிறகு மற்றவர்கள் எல்லாம் பேசுவார்கள் என்று சொன்னேன். அதேபோல்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நானே விரும்பி அன்புதுரையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று எனக்கு உணர்வு ஏற்பட்டு, அந்த உணர்வைச் சொல்லவில்லை என்று சொன்னால், நான் நன்றி மறந்தவனாகிவிடுவேன். அதனால்தான், அந்த உணர்வோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நானும் மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

அன்புதுரை எந்த இலட்சியத்திற்காக, எந்த கொள்கைக்காக, அன்புதுரை மட்டுமல்ல, அவருடைய துணைவியார் அவர்களும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்து அவர் கட்சிப் பணியாற்றிருக்கும், பொதுப்பணி ஆற்றியிருக்கும் அந்த நிலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்த வட்டாரத்தைப் பொறுத்தவரை, அன்புதுரையைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அன்புதுரை என்ற பெயருக்கு ஏற்றாற்போல அன்பு, அன்பு அன்பு என்று எல்லோரிடத்திலும் அன்போடு பழகக்கூடியவராக இருக்கிறார். அவருடைய செல்வங்கள், மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்றுச் சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும் “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்” இருந்து பாடுபடுங்கள், பணியாற்றுங்கள். அதே நேரத்தில், மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களுக்கு ஓர் உரிமையான வேண்டுகோள்; அனைத்து இடங்களிலும் சொல்வதுதான், உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்; தமிழ்மொழிக்குச் சிறப்பு சேர்த்துத் தாருங்கள் என்று அவர்களிடத்தில் என்னுடைய அன்பான வேண்டுகோளை வைத்து வாழ்க மணமக்கள்! வாழ்க மணமக்கள்! என்று தெரிவித்து, விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் அமைக்கப்படும்” - விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு !