Tamilnadu

நீட் PG தேர்வு ரத்து: திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் ஒன்றிய அரசு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்று நாடு முழுவதும் நீட் முதுநிலை தேர்வு நடைபெறவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரவு, அதாவது தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்தது.இந்த தேர்வுகள் பல்வேறு மையங்களில் நடைபெறும் நிலையில், ஏராளமான மாணவர்கள் தேர்வுக்காக முன்னரே தேர்வு மையங்களை நோக்கி பயணத்தில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கால் இன்னும் எத்தனை குழப்பங்களும், குளறுபடிகளும் நடைபெறும் என்று கணிக்க முடியாத சூழலில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "நீட் தேர்வு தொடர்ந்தால் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு எட்டா கணியாக மாறி விடும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு நாடே காத்திருந்த ஜூன் 4 2024 அன்று நீட் தேர்வு முடிவுகளும் வெளிவந்தன. இத்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு முதல் குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அவரை தொடர்ந்து கல்வியாளர்களும், மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீட் தேர்வு மோசடியான தேர்வு என ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருந்ததை இன்று வடமாநிலத்தவரும் உணர ஆரம்பித்துள்ளனர்.

2017 ஆம் தொடங்கி இந்தியாவில் நீட் தேர்வு முறை இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2016ஆம் ஆண்டு இறுதியிலேயே நீட் தேர்விற்கு எதிரான கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். 2017ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் இத்தேர்வு முறை நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தவரை, ஏன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் கூட நீட் தேர்வு நடைமுறைக்கு வரவில்லை.

ஆனால் 2017க்குப் பிறகு நீட் தேர்வு முறை நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வு முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. அதோடுமட்டுமல்லாமல் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு நீதி அரசர் ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளை சட்ட மசோதாவாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அவர்கள் மூலம் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்துறை அமைச்சகமும் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர்கல்வித்துறை, மருத்துவக்கல்வித்துறை, ஆயுஷ் போன்ற பல்வேறு நிர்வாகங்களுக்கு சிறிய அளவிலான கேள்விகளை கேட்டு அனுப்பி இருந்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு பதில்கள் தொடந்து அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நீட் தேர்வில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும், குளறுபடிகளும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண் பெற்றவர்கள் 2 பேர், 2022 ஆம் ஆண்டு யாருமே முழுமையான மதிப்பெண் பெறவில்லை. 2023 ஆம் ஆண்டு 2 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 2024ல் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர், இதில் குழப்பத்திற்கான முக்கிய காரணம், 720க்கு 720 முழு மதிப்பெண்ணாக 67 பேர் பெற்றதும், அதன் தொடர்ச்சியாக 719, 718 போன்ற மதிப்பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 180 கேள்விகள் ஒவ்வொரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். இவற்றுள் மாணவர் ஒரு கேள்வி விட்டு விட்டால் அவருக்கு 716 மதிப்பெண்கள் கிடைக்கும், அதுவே அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்து அதில் ஒன்று தவறாக பதில் அளிக்கப்பட்டால் அந்த மாணவருக்கு 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும், காரணம் ஒரு கேள்வி தவறானதாக பதில் அளித்தற்கு அபராதமாக 4 மதிப்பெண் மற்றும் கூடுதலாக அபராதமாக 1 மதிப்பெண் குறைக்கப்பட்டு, 715 மதிப்பெண்கள் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய வரைமுறையில் உள்ள இந்த தேர்வில் இந்த ஆண்டு மாணவர்கள் 719, 718 போன்ற மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதாக குழப்பியது. 23 இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் குறிப்பிட்ட 1563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் கொடுத்தது ஏன்? இந்த கருணை மதிப்பெண் யார் யாருக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? எந்தெந்த தேர்வு மையங்களில் காலதாமதம் ஏற்பட்டது? ஏன் மற்ற மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவில்லை? போன்ற கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகமையிடம் பதில் இல்லை.

மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு மறுத்தது.தற்போது தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதை ஒன்றிய அரசு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தநிலையில் தேசிய தேர்வு முகமை தலைவராக உள்ள சுபோத்குமாரை நேற்று திடீரென்று ஒன்றிய அரசு நீக்கி நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மெய்ப்பித்துள்ளது.

ஒன்றிய அரசின் குழப்பங்களின் தொடர்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை நேற்று இரவு 9 மணிக்கு தள்ளி வைத்துள்ளது. நாட்டில் 297 நகரங்களில் நடைபெற இருந்த தேர்வில் 2,28,757 மாணவர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில் சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் நிலையில் ஒன்றிய அரசின் போக்கு உள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுகிறது என்று நாம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கண்டுகொள்ளாத ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கால் இன்னும் எத்தனை குழப்பங்களும், குளறுபடிகளும் நடைபெறும் என்று கணிக்க முடியாத சூழலில் உள்ளது" என்று கூறியுள்ளார்.

Also Read: நீட் PG தேர்வு ரத்து: மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறை சவப்பெட்டியின் இறுதி ஆணிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்