Tamilnadu
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, துறைசார்ந்த அமைச்சர்களின் பதில்! : சட்டமன்ற கூட்டத்தொடர்!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 20.06.24ஆம் நாள் முதல் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் அமர்வில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய நாள் (21.06.24), காலை, மாலை என நடந்த இரு அமர்வுகளில், நீர்வளத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று (22.06.24), கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அவ்வகையில், தொழிலாளர் நலன் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன்,
“தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து உதவித்தொகைகள் போல், அனைத்து உதவிகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
பணியின் போது உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
வெளி மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வேலைக்கும் வரும் தொழிலாளர்களில் இதுவரை 8,37,540 பேர் அரசு அலுவலங்களில் பதிவு செய்துள்ளனர்.
எனவே புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் சட்டம் பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து, கேள்விகளுக்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்,
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் சாலை வசதியே இல்லாத அணைக்கட்டு மலைக்கிராமத்திற்கு சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது. இனி விரைவிலேயே அணைக்கட்டு தொகுதிக்குடப்பட்ட மலைக்கிராமத்திற்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு,
“1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 517 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அன்று திருவாரூரில் ஓடாத ஆழித்திருத்தேரை இயக்கி முத்தமிழறிஞர் கலைஞர் புகழ்பெற்றார். இன்று ஓடாமல் இருந்த கண்டதேவி தேரை, 18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சேரும்” என்றும்,
தமிழ்நாடு முழுவதும் 34 இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான கோயில்களில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
“பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.7500 கோடி ரூபாய் செலவில் மாநிலம் முழுவதும் 16,000 வகுப்புறைகள் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதற்கட்டமாக, ரூ.2,497 கோடி ரூபாய் செலவில், 3,603 பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது” என பதிலளித்தார்.
இவர்களை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,
“தமிழ்நாடு முழுவதும் இன்னும் 2 மாதத்திற்குள் குறைந்த விலையில் அனைத்து அரசு கேபிள்களிலும் ‘HD செட் ஆப் பாக்ஸ்’ கொண்டு வரப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி உச்சத்தை நோக்கி செல்லும்” என உறுதியளித்தார்.
அதன் பிறகு பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதிலுரையில்,
“திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் ரூ.42 கோடி செலவில் 44 சமுதாய நலக்கூடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 20 சமுதாய நலக்கூடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. விரைவில் மீதமுள்ள சமுதாய நலக்கூடங்கள் கட்டி முடிக்கப்படும். மேலும் இந்தாண்டு, ரூ.100 கோடி செலவில் மேலும் 120 சமுதாய நலக்கூடங்கள் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!