Tamilnadu

சட்டப்பேரவையில் அமளி : “திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றிய பழனிசாமி!” - முதலமைச்சர் தாக்கு !

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20 முதல் 29 வரை நாள் ஒன்றுக்கு இரண்டு Session ஆக நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 20) தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.புகழேந்தி உட்பட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இன்று (ஜூன் 21) இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் மானியங்கள் மீதான விவாதங்கள், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை நடைபெற இருந்தது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்தில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் செய்ய சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்த பிறகும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் விதிகளை மீறி சபாநாயகர் முன்பு அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டத்தை மீறி செயல்பட்டதால், பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அமளியில் ஈடுபடக்கூடாது என்ற விதி உள்ளது. எனினும் அதிமுகவினர் பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் என பலமுறை சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி வலியுறுத்திய பிறகும், அவர்கள் அமளியில் ஈடுபடுவதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

இதனால் சட்டத்தை மீறி செயல்பட்ட அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அவை முன்னவர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றப் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக உறுப்பினர்களை மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு கோரி, சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர் பேசிய விவரம் வருமாறு :

"கடந்த டிசம்பர் 2001-ல் இதுபோன்று ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் நடைபெற்று, 52 நபர்கள் மரணமுற்று, 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரிவர எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அவர்களும், நம்முடைய தி.வேல்முருகன் அவர்களும் அவையிலேயே இதுகுறித்து மார்ச் 2002 ஆம் ஆண்டு உரையாற்றியிருக்கிறார்கள்.

தற்போது இந்தச் சம்பவம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வந்தவுடனேயே நான் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதுகுறித்து நான் அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் விரிவாகப் பதில் வழங்குகிறேன்.

அப்போது சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசுகிற உறுப்பினர்கள் அந்த நிகழ்வு குறித்து பேசுவார்களோ என பயந்துதான் இவர்கள் இன்றைக்குத் திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டு, மரபுகளுக்கு மாறாக குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெறவேண்டும் என்பதில், தலைவர் கலைஞர் அவர்களும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர்.

தாங்களும் பல கோரிக்கைகள் வைத்து, பேரவை முன்னவர் அவர்களும் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கே நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்கப்பட வேண்டியதுதான்.

பேரவை விதி 120-ன்கீழ் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும் என்னுடைய வேண்டுகோளாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்குக் காலையிலும், மாலையிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனை தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்"

Also Read: கள்ளக்குறிச்சி விவகாரம் : மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை அதிரடியாக கைது செய்த CBCID போலீஸ்!